Published : 10 Oct 2023 04:22 PM
Last Updated : 10 Oct 2023 04:22 PM
புதுடெல்லி: ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்த சமீபத்திய தகவல்களை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார்.
தங்கள் நாட்டுக்குள் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரின் 1,290 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ‘போரை நாங்கள் தொடங்கவில்லை. ஆனால், நாங்கள் வெற்றிகரமாக அதனை முடித்துவைப்போம். இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறக்கமுடியாத பதிலடியை நாங்கள் கொடுப்போம்’ என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் குறித்த சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘தற்போதைய நிலை குறித்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு நன்றி. கடினமான இந்த தருணத்தில் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் தங்கள் உறுதியான ஆதரவை அளித்து வருகிறார்கள். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போர் தொடங்கிய கடந்த சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் குறித்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். இந்த கடினமான தருணத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது’ என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
பிரதமரின் பதிவுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் நன்றி. இந்திய சகோதர, சகோதரிகளிடம் இருந்து மிகப் பெரிய ஆதரவு இஸ்ரேலுக்குக் கிடைத்துள்ளது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளேன். எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பது நினைகூரத்தக்கது.
இஸ்ரேல் ராணுவம் தகவல்: எல்லைகளில் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், காசா சுற்றுப் பகுதிகளில் ஹமாஸ் இயக்கத்தினரின் 1,500 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுவரை பலி 1,600: கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்தி வரும் கடும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீன நாட்டு மக்கள் சுமார் 700 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். இதனிடையே, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 1.20 லட்சம் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.
காசா மீது பெரும் தாக்குதலை இஸ்ரேல் படைகள் திங்கள்கிழமை மேற்கொண்டன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசா பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளது. “காசா பகுதி, தெற்கு எல்லையோரப் பகுதிகளில் நாங்கள் பெரும் தாக்குதலை நடத்தினோம். இதன்மூலம் காசா பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு எரிபொருள், உணவு, மின்சார வசதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு நாங்கள் மனிதர்களோடு போரிடவில்லை. மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம். காசா முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதை இப்போது அறிவிக்கிறோம்” என்று இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்திருந்தார்.
போரின் பின்புலம்: இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியாக காசா அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் படை தன்னாட்சி செய்து வருகிறது. இதற்கு பாலஸ்தீனம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அவ்வப்போது காசா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT