Published : 10 Oct 2023 04:50 AM
Last Updated : 10 Oct 2023 04:50 AM
புதுடெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நவ.7 முதல் 30-ம் தேதி வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா சட்டப்பேரவை பதவிக் காலம் வரும் 2024 ஜனவரியில் வெவ்வேறு தேதிகளிலும், மிசோரம் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் டிச.17-ம் தேதியும் முடிவடைகிறது.
இப்போது மத்திய பிரதேசத்தில் பாஜக, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி, மிசோரம் மாநிலத்தில் மிசோ நாகா முன்னணி ஆகிய கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இந்நிலையில், இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:
மிசோரம் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் நவ.7-ம் தேதி தேர்தல் நடைபெறும். சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவ.7, 17-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும். மத்திய பிரதேசத்தில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23, தெலங்கானாவில் நவ.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும். சத்தீஸ்கர் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
5 மாநிலங்களில் மொத்தம் 679 தொகுதிகள் உள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த சட்டப்பேரவை தொகுதிகளில் 6-ல் ஒரு பங்கு ஆகும்.
16 கோடி வாக்காளர்கள்: தெலங்கானாவில் 3.17 கோடி, ராஜஸ்தானில் 5.25 கோடி, மத்தியபிரதேசத்தில் 5.60 கோடி, சத்தீஸ்கரில் 2.03 கோடி, மிசோரமில் 8.52 லட்சம் என மொத்தம் 16 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1.77 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ‘சி-விஜில்’ என்றசெயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பெறப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் பதில் அளிக்கப்படும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,500 வாக்காளர்கள் என்ற விதி அமல்படுத்தப்படுகிறது.
வனப்பகுதிகள், பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.
நடத்தை விதிகள் அமல்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
பாதுகாப்பு நிலவரங்களை கருத்தில் கொண்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய பிரதேசத்தில் மொத்தம்230 தொகுதிகள். இங்கு ஆட்சிஅமைக்க 116 இடங்கள் தேவை.ராஜஸ்தானில் 200 தொகுதிகள். இங்கு ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. தெலங்கானாவில் 119 தொகுதிகள். இங்கு ஆட்சி அமைக்க 60 இடங்கள் தேவை. 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT