Published : 10 Oct 2023 06:41 AM
Last Updated : 10 Oct 2023 06:41 AM
புதுடெல்லி: ரூ.23,500 கோடியில் இந்திய ராணுவத்துக்கு நவீன ரக ஆயுதங்களை வாங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியா, சீனா இடையே கடந்த 2020-ம் ஆண்டு முதல் கிழக்கு லடாக் அருகே அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா, சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த பதற்றமான சூழ்நிலையில், இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு நவீனரக ஆயுதங்கள் வாங்குவதற்கு ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அவசர கால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆயுதங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள், ராடார் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
70 ஒப்பந்தங்கள்: இதில் அதிகபட்சமாக ராணுவத்துக்காக 70 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கடற்படைக்கு 65 ஒப்பந்தங்களும் விமானப்படைக்கு 35 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிஉள்ளன. இதில் ராணுவத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடியிலும், இந்திய விமானப் படைக்கு ரூ.8,000 கோடி யிலும், கடற்படைக்கு ரூ.4,500 கோடியிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் ரூ.1,500 கோடி மதிப்பிலான ட்ரோன்கள் வாங்குதல், ட்ரோன் எதிர்ப்பு கருவிகளை வாங்குதல் உள்ளிட்டவையும் அடங்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT