Published : 09 Oct 2023 01:21 PM
Last Updated : 09 Oct 2023 01:21 PM

நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்

புதுடெல்லி: தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று நண்பகல் நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

தெலங்கானா தேர்தல்: தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்ளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10. வேட்புமனுக்கள் நவம்பர் 13ம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 15. தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி.

சத்தீஸ்கர் தேர்தல்: சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 7ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 17ம் தேதியும் நடைபெற உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.

மத்தியப் பிரதேச தேர்தல்: மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 21ம் தேதி தொடங்கி, 30ம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் வரும் 31ம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளன. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 2. பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும்.

ராஜஸ்தான் தேர்தல்: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 6. வேட்புமனுக்கள் நவம்பர் 7ம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 9. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.

மிசோரம் தேர்தல்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி, 20ம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் வரும் 21ம் தேதி பரிசீலிக்கப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 23.

தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அம்மாநிலத்தின் முதல்வராக கே. சந்திர சேகர ராவ் உள்ளார். இவரது 10 ஆண்டு கால ஆட்சி மீதான மக்களின் தீர்ப்பாக வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் கருதப்படுகிறது. தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு காங்கிரஸ் கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், இம்மாநிலத்தில் பாஜகவும் தற்போது வலுவடைந்துள்ளது. எனவே, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சியில் உள்ளது. சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த மூன்று மாநில தேர்தல்களும் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், இந்த மாநிலங்களில் போட்டியே பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான். நாட்டின் இரு பிரதான தேசிய கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். இங்கே, மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே உள்ளது. அந்த வகையில், 5 மாநில தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேயான உண்மையான களமாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x