Published : 08 Oct 2023 04:56 AM
Last Updated : 08 Oct 2023 04:56 AM
புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம், நரேந்திர மோடி ஸ்டேடியத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து மும்பை காவல் துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய பாதுகாப்பு பிரிவு ஒன்றுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், ‘‘சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவிக்க வேண்டும். ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையென்றால், பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்வோம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தையும் குண்டுவைத்து தகர்ப்போம். இந்தியாவில் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. நாங்களும் சிலவற்றை வாங்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும், நீங்கள் எங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. நீங்கள் பேச விரும்பினால், நாங்கள் கூறியதை செய்யுங்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயில்எங்கிருந்து வந்தது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த மிரட்டல் இ-மெயில் குறித்து மும்பை காவல்துறை, குஜராத் காவல்துறை மற்றும் பிரதமரின் பாதுகாப்பு தொடர்புடைய அமைப்புகளுக்கு என்ஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட்டின் 5 போட்டிகள் நடைபெற உள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யார் இந்த லாரன்ஸ் பிஷ்னாய்?: ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய் கடந்த 2014-ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் உள்ளார். இவரது தனது ரவுடி கும்பலை சிறையில் இருந்து கொண்டே செயல்படுத்துகிறார். இவர் மீது கொலை உட்பட பல வழக்குகள் உள்ளன. பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கடந்தாண்டு கொலை செய்யப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்ணாய் பொறுப்பேற்றார்.
இவர் இதற்கு முன்பும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மான் வேட்டையில் ஈடுபட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது, தனது சமூகத்தினர் கோபமாக இருப்பதால், அவரை படுகொலை செய்வோம் என இவர் முன்பு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT