Published : 08 Oct 2023 04:50 AM
Last Updated : 08 Oct 2023 04:50 AM
புதுடெல்லி: கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் தலைமைச் செயலர் பி.கே.மிஷ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் ஆற்றிய சுதந்திர தின உரையில், ஏழை, நடுத்தர மக்கள்வீடு கட்டுவதற்கு மத்திய அரசு கடன் மானியம் வழங்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறது என்று தெரிவித்தார். நடுத்தர மக்கள் தங்களுக்கென்று சொந்தவீடு வாங்கும் கனவைக் கொண்டிருக்கின்றனர். நகர்ப்புறங்களில் பல ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாடகை வீட்டில், சேரிகளில், அங்கீகாரமற்ற இடங்களில் வசித்து வருகின்றனர். அத்தகைய குடும்பங்கள் சொந்த வீடு வாங்கும் வகையில் புதியதிட்டத்தை மத்திய அரசு உருவாக்குகிறது. சொந்த வீடு வாங்க விரும்பும் மக்களுக்கு மத்திய அரசு கடன் மானியம் வழங்கி உதவும். இதனால், அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.. இந்நிலையில் இத்திட்டங்களை நடைமுறைபடுத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.
இதேபோல் விஸ்வர்கமா திட்டத்துக்கும் ரூ.13 ஆயிரம் கோடிஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT