Published : 07 Oct 2023 01:48 PM
Last Updated : 07 Oct 2023 01:48 PM
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மையக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் உடன், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா உள்ளிட்ட பிற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அசோக் கெலாட், "பிஹாரில் நடத்தப்பட்டது போல ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ராகுல் காந்தியின் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் விகிதாச்சார முறை பங்கேற்பு அறிவுரைகள் மாநிலத்தில் மேலும் மேம்படுத்தப்படும். எனவே கட்சியின் ஆணையினை மனதில் வைத்து, ராஜஸ்தான் மாநில அரசு இந்தப் பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு சாதிகள் உள்ளன. பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். பல்வேறு சாதியினர் பலவகையான தொழில்களைச் செய்கின்றனர். ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களுக்கு ஏற்றபடி திட்டங்களை வகுக்க முடியும். சாதிவாரியாக திட்டங்களை வகுப்பது எளிதாக இருக்கும். இவ்வாறு கெலாட் தெரிவித்தார்.
கூட்டம் பற்றி காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தாவா கூறுகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு தவிர கூட்டத்தில் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய்த்திட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டது" என்றார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கூறுகையில், "திங்கள் கிழமை நடைபெற இருக்கும் முக்கியமான கூட்டத்தில் கிழக்கு ராஜஸ்தான் மாநில கால்வாய் திட்ட விவகாரத்துக்கான யாத்திரை தேதிகள் குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
முன்னதாக, மாநிலத்தின் 13 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்யும் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்துக்கு தேசிய அந்தஸ்து வழங்கக்கோரி 5 நாட்கள் யாத்திரை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT