Published : 07 Oct 2023 01:01 PM
Last Updated : 07 Oct 2023 01:01 PM

சிக்கிம் வெள்ளப் பெருக்கு | உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயம்

சிக்கிம்: வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 3ம் தேதி இரவு கனமழை பெய்தது. இதையடுத்து, வடக்கு சிக்கிம் பகுதியில், நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்தில் பாயும் தீஸ்தா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால், லச்சன் பள்ளத்தாக்கு பகுதியில், தீஸ்தா நதியின் குறுக்கே உள்ள நடைபாலம் உள்பட 13 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சிக்கிம் - மேற்குவங்கத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள் உள்பட பல்வேறு சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கரையோரத்தில் இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். ஆயிரத்து 200 வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ராணுவ முகாமும், அதில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ராணுவத் தளவாடங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், காணாமல் போன பலரது உடல்கள் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதை சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று உறுதிப்படுத்தியது. 142 பேரை காணவில்லை என்றும் அது கூறியது. சிக்கிமின் மான்கன் மாவட்டத்தில் 4 பேரின் உடல்களும், காங்டாக்கில் 6 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதோடு, 7 ராணுவ வீரர்களின் உடல்கள் உள்பட 16 பேரின் உடல்கள் பாக்யாங் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீஸ்தா நதி பாயும் மேற்கு வங்கத்தின் சிலிகுரி, ஜல்பைகுரி, கூச் பெஹார் மாவட்டங்களில் இருந்து 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x