Published : 07 Oct 2023 06:03 AM
Last Updated : 07 Oct 2023 06:03 AM
புதுடெல்லி: பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1931-ம் ஆண்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
அதன்பிறகு கடந்த 2011-ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி அரசு சமூக பொருளாதார மற்றும் ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பின் முழு விவர அறிக்கை கடந்த 2014-ல் தயாரானது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த சூழலில் பிஹாரில் ஆட்சி நடத்தும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அரசு சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.
இதை எதிர்த்து பிஹார் உயர் நீதிமன்றத்தில் 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 2-ம் தேதி பிஹார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. இதில், மாநிலத்தில் 63.14 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பொதுப்பிரிவினர் 15.52%, தலித் மக்கள் 19.65%, பழங்குடியினர் 1.69 % பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பட்டி அமர்வு முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபர்ஜிதா சிங் கூறும்போது, “மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை’’ என்று வாதிட்டார்.
பிஹார் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும்போது, “பிஹார் அரசு சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வே நடத்தப்பட்டது’’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: மத்திய அரசோ, மாநில அரசுகளோ கொள்கை ரீதியில் எடுக்கும் முடிவுகளுக்கு தடை விதிக்க முடியாது. பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட இப்போதைக்கு தடை விதிக்க முடியாது. இந்த கணக்கெடுப்பில் தனிநபரின் பெயர், விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனவே தனிநபரின் அந்தரங்கம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து மட்டுமே விசாரிக்கப்படும். வழக்கின் அடுத்த விசாரணை 2024 ஜனவரிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் பிஹார் அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT