Published : 05 Oct 2023 05:25 PM
Last Updated : 05 Oct 2023 05:25 PM

சிக்கிம் வெள்ளப் பெருக்கு: 14 பேர் உயிரிழப்பு; இதுவரை 102 பேர் மாயம்

புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தின் தீஸ்தா நதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 22 ராணுவ வீரர்கள் உள்பட 102 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. வடக்கு சிக்கிம் பகுதியில், நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதால், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்தில் பாயும் தீஸ்தா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள சங்தங் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், தீஸ்தா நதியில் நேற்றுஅதிகாலை 1.30 மணி அளவில் நீர்மட்டம் 20 அடி உயரத்துக்கு திடீரென உயர்ந்தது.

இதனால், லச்சன் பள்ளத்தாக்கு பகுதியில், தீஸ்தா நதியின் குறுக்கே உள்ள நடைபாலம், சிக்கிம் - மேற்குவங்கத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கரையோரத்தில் இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் உட்பட 102 பேரை காணவில்லை. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் சேற்றில்மூழ்கின. சிங்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ள செய்தியில், ‘கனமழை காரணமாக சிக்கிம் சங்தங் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் கஜோல்தோபா, தோமாஹனி, மெகாலிகஞ்ச் மற்றும் கிஷ் போன்ற தாழ்வான பகுதிகள் பாதிக்கப்படக்கூடும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் வெள்ளப் பெருக்குக் குறித்து இஸ்ரோ ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரோ மையங்களில் ஒன்றான நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர், சிக்கிமில் உள்ள தெற்கு லோனாக் ஏரியின் வெடிப்பு குறித்து செயற்கைக்கோள் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டது. "ஏரி வெடித்துள்ளது. சுமார் 105 ஹெக்டேர் பரப்பளவில் வெள்ளம் வெளியேறியதால் கீழ் நோக்கிய பகுதிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம்” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிக்கிமில் பெய்த அதிகப்படியான மழை மற்றும் மேகவெடிப்பு இரண்டும் சேர்ந்ததால் லோனாக் ஏரியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கை அடுத்து உதவிக்கான தொலைபேசி எண்களை சிக்கிம் அரசு வெளியிட்டுள்ளது.

கேங்டாக், நாம்சி, மான்கன், பாக்யோங், சோரெங், கியால்ஷிங் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியான உதவி தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனது குறித்து புகார் தெரிவிக்க 7001911393 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x