Published : 05 Oct 2023 04:03 PM
Last Updated : 05 Oct 2023 04:03 PM

மகாராஷ்டிராவின் ‘நான்டெட்’ அரசு மருத்துவமனை உயிரிழப்புகள் - டீனுக்கு எதிராக வழக்குப் பதிவு

நான்டெட் மருத்துவமனை | கோப்புப் படம்

மும்பை: மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் குறுகிய காலத்தில் குழந்தைகள் உள்பட 38 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனையின் டீன் ஷியாம்ராவ் வகோடே மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ளது ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு மேலும் 14 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 38 ஆக அதிகரித்தது. உயிரிழந்தவர்களில் சுமார் 20 பேர் குழந்தைகள். குறுகிய காலத்தில் 38 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவரான அஞ்சலி என்பவரின் தந்தை காமாஜி மோகன் தோம்பி அளித்துள்ள புகாரில், "எனது மகள் பிரசவித்த பிறகு மருத்துவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தார்கள். அப்போது சுகப் பிரசவம் நடந்திருப்பதாகவும், தாயும் சேயும் நன்றாக இருப்பதாகவும் கூறினார்கள். பின்னர், மீண்டும் வந்து எனது மகளுக்கு ரத்தப் போக்கு அதிகமாகி இருப்பதாகவும், இதனால் அவரும் குழந்தையும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறினார்கள். எனது மகளுக்கு மருந்தும், ரத்தமும் கொடுப்பதற்காக நாங்கள் சென்றபோது அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. எனது மகளையும் குழந்தையையும் பார்த்துவிட்டு டீனிடம் வந்து கதறினேன். மருத்துவர்களை அனுப்பி அவர்களை காப்பாற்றும்படி கெஞ்சினேன். ஆனால், அவர் வெளியே காத்திருக்கும்படி கூறிவிட்டார்.

சரியான நேரத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருந்தால் எனது மகளும் குழந்தையும் உயிரோடு இருந்திருப்பார்கள். எனது மகளின் பிரசவ சிகிச்சைக்காக நாங்கள் ரூ.45 ஆயிரம் செலவு செய்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில், கொலை குற்றத்திற்கு நிகரான கொலை நோக்கம் இல்லாத கொலை குற்றச்சாட்டின் கீழ் (ஐபிஎல் பிரிவு 304) மருத்துவமனையின் டீன் ஷியாம்ராவ் வகோடே மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவின் தலைவர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நான்டெட் அரசு மருத்துவமனையின் தற்காலிக டீனை மருத்துவமனையின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சிவசேனா எம்.பி. ஹேமந்த் பாட்டீல் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மருத்துவமனையின் தற்காலிக டீன் மருத்துவர் ஷ்யாம் வகோடேவை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினைச் சேர்ந்த எம்.பி., ஹேமந்த் பாட்டீல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா மருத்துவ சேவை நபர் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை இழப்பு, சொத்துக்களுக்கு சேதம்) ஆகியவைகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x