Published : 05 Oct 2023 09:39 AM
Last Updated : 05 Oct 2023 09:39 AM
புதுடெல்லி: வந்தேபாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியலும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாறாக அறிவியல் காரணங்களுக்காகவே அவ்வாறான நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "மனித கண்களுக்கு இரண்டு நிறங்கள்தான் மிகவும் தெளிவாக நீண்ட தூரத்துக்கு அப்பால் இருந்தும் புலப்படும். அவற்றில் ஒன்று மஞ்சள், இன்னொன்று காவி நிறம். ஐரோப்பிய நாடுகளில் 80 சதவீத ரயில்கள் இந்த இரண்டு நிறங்களில் தான் இருக்கின்றன.
ஒரு சில இடங்களில் சில்வர் நிறம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஒப்பீட்டு அளவில் சில்வர் நிறத்தைவிட ஆரஞ்சு, மஞ்சள் நிறங்கள் தான் அதிக அடர்த்தியுடம் பார்வைக்குப் புலப்படும் என்பதால் இந்த நிறங்களை புதிய வந்தேபாரத் ரயில்களுக்குப் பயன்படுத்துகிறோம். ஆகையால் இதன் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை. 100 சதவீதம் அறிவியல்தான் இருக்கிறது.
விமானங்கள், கப்பல்களில் உள்ள கறுப்புப் பெட்டிகளில் நிறங்கள் ஆரஞ்சாக இருப்பதற்கும் இதுதான் காரணம். அதேபோல் லைஃப் ஜாக்கெட்டுகளையும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு இந்த நிறத்தில் தான் பயன்படுத்துகிறது" என்று விளக்கினார்.
சாதாரண் வந்தேபாரத்: சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தேபாரத் வகை ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்லவரவேற்பு கிடைத்து வருகிறது. இங்கு, இதுவரையில் 35 வந்தேபாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 34 ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ‘ஏசி’ பெட்டிகளாகவும், சொகுசு ரயிலாக இருக்கின்றன. மற்ற விரைவு ரயில்களை ஒப்பிடுகையில், கட்டணமும் அதிகமாக இருப்பதாக பயணிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றன.
ஏழை எளிய நடுத்தர மக்களும் பயணிக்கும் வகையில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ‘சாதாரண் வந்தேபாரத்’ ரயில் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த மாத இறுதியில் இந்த ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT