Published : 05 Oct 2023 04:56 AM
Last Updated : 05 Oct 2023 04:56 AM
புதுடெல்லி: அமலாக்கத் துறை ஒருவரை கைது செய்யும்போது கைதுக்கான காரணத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் சம்மனுக்கு ஒத்துழைக்கவில்லை என்றோ அல்லது கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என்றோ காரணம் கூறி ஒருவரை கைது செய்ய முடியாது என்றும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநர்களான பங்கஜ் பன்சால் மற்றும் பசந்த் பன்சால் ஆகியோர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, பி.வி.சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
அமலாக்கத் துறையின் சம்மனுக்கு ஒத்துழைக்கவில்லை என்றோ, அமலாக்கத் துறை விசாரணையின்போது எழுப்பும் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என்றோ காரணம் கூறி ஒருவரை கைது செய்ய முடியாது. ஏனெனில் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய போதுமான ஆதாரமாக இருக்காது. அதேபோல சம்மன் கொடுத்து வரவழைக்கப்பட்ட நபரிடமிருந்து குற்றத்தை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை எதிர்பார்க்க முடியாது.
இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் இயக்குநர்களான பங்கஜ் பன்சால் மற்றும் பசந்த் பன்சால் ஆகியோரை சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யும்போது அதற்கான காரணத்தை அவர்களிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவிக்க தவறியுள்ளனர்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் யாரை கைது செய்தாலும் கைதுக்கான காரணத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். எனவே இந்த வழக்கில் பங்கஜ் பன்சால் மற்றும் பசந்த் பன்சால் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்குகிறோம். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
குற்றங்களை தடுக்கும் நோக்கில் அமலாக்கத் துறைக்கு 2002-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், சட்டப்பூர்வ அமைப்பாக தனது அதிகாரத்தை நான்கு எல்லைகளுக்கு உட்பட்டு செயல்படுத்த வேண்டும். அதிகாரத்தை தவறாக கையில் எடுத்துக்கொண்டு பழிவாங்கும் நோக்குடன் செயல்படக் கூடாது.
மேலும், அமலாக்கத் துறை நடுநிலைமை தவறாமல் மிகுந்த நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் கடுமையான தரங்களை கடைபிடிக்கும் அமைப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவு குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சி.திருமாறன் கூறியது: இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்பது எல்லா வழக்குகளுக்கும் பொருந்தாது. பொதுவாக அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென்றும், ஒரு வழக்கில் சம்மன் அனுப்பிவிட்டு மற்றொரு வழக்கில் கைது செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் பலமுறை சம்மன் பிறப்பித்தும் குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றால் அது அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை நீர்த்துப்போக செய்துவிடும். அதேநேரம் கைதுக்கான காரணத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்பதை நீதிபதிகள் நினைவுபடுத்தியுள்ளனர்.
அமலாக்கத் துறைக்கு பிரத்யேக அதிகாரம் அரசியலமைப்பு சட்ட ரீதியாக உள்ளது என்றாலும், தனது அதிகாரத்தை சட்டத்துக்கு உட்பட்டு பாகுபாடின்றி செயல்படுத்த வேண்டும் என்று தான் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT