Published : 04 Oct 2023 06:45 PM
Last Updated : 04 Oct 2023 06:45 PM
புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபானக் கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம்சாட்டின. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (அக்.4) காலை 7.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக சஞ்சய் சிங்கை அவரது வீட்டில் வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மதுபானக் கொள்கை முறைகேட்டில் முக்கிய நபராக இவர் செயல்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோதியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த மே மாதம இந்த வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் உணவக உரிமையாளரான தினேஷ் அரோராவுக்கு உள்ள தொடர்பு குறித்து மணிஷ் சிசோதியா குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தினேஷ் அரோராவின் நெருங்கிய நண்பராக சஞ்சய் சிங் இருப்பதாகவும் கூறப்படுகிறது. .
தினேஷ் அரோராவை கடந்த ஜூலையில் கைது செய்த அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தியது. அதில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு உதவ வேண்டும் என்றும் தினேஷ் அரோராவை சஞ்சய் சிங் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, சஞ்சய் சிங் வீட்டில் நடந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், "மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி கடந்த ஓராண்டாக அவர்கள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை எதையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. சஞ்சய் சிங் வீட்டில் நடக்கும் சோதனையிலும் எதுவும் கிடைக்காது. ஒருவர் (பிரதமர் மோடி) தோல்வியை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் அவநம்பிக்கை கொள்கிறார். அவநம்பிக்கையான செயல்களையே நாடுகிறார். அதுதான் இப்போது நடக்கிறது.
தேர்தல் நெருங்கும்போது இதுபோன்ற ரெய்டுகள் அதிகரிக்கும். அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை, காவல் துறை என அனைத்து விசாரணை அமைப்புகளும் முடுக்கிவிடப்படும். நேற்று பத்திரிகையாளர்கள் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனை நடந்தது. இன்று சஞ்சய் சிங் வீட்டில் சோதனை நடக்கிறது. இப்படி பல சோதனைகள் நடக்கும். அச்சம் கொள்வதற்கு எந்த அவசியமும் இல்லை" என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தி பாஜக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி மனோஜ் திவாரி, "முதல்வர் பதவியை அர்விந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோதியா ஆகியோர் நீண்டகாலமாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற அரவிந்த் கேஜ்ரிவால் முயல்கிறார். அவர்களின் செயல்களுக்கு மூளையாக இருந்தவர் அரவிந்த் கேஜ்ரிவால்தான்" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT