Published : 09 Dec 2017 07:22 AM
Last Updated : 09 Dec 2017 07:22 AM
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய குற்றவியல் சட்டம், 1860, பிரிவு 497-ன் படி, திருமணமான ஆணோ, பெண்ணோ தங்கள் திருமண உறவைத் தாண்டி தவறான உறவில் ஈடுபடும்போது, அச்சம்பவத்தில் தொடர்புடைய ஆண்கள் குற்றவாளிகளாகவும், பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். இந்த நடைமுறை இந்திய அரசியல் அமைப்பின் சட்டப்பிரிவுகள் 14 மற்றும் 15-ல் கூறப்பட்டுள்ள சம உரிமையை மீறுவதாகும். ஒரு திருமணமான ஆண், திருமணம் ஆகாத பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது இச்சட்டப்பிரிவின் கீழ் வரவில்லை.
அதேசமயம், திருமணமான பெண் தனது கணவரின் விருப்பத்துடன் வேறு ஒருவருடன் தவறான உறவு வைத்துக் கொண்டால் அதுவும் இப்பிரிவின் கீழ் குற்றச்செயலாக வரவில்லை. இந்த பாரபட்சமான பார்வை பெண்களை ஒரு ஜடப் பொருளாக நடத்துவதைப் போல் அமைந்துள்ளது. மேலும், பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சர்வதேச பெண் உரிமைகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளது. எனவே, பாரபட்சமாக அமைந்துள்ள பிரிவு 497-ஐ ரத்து செய்து சட்டப்படி இப்பிரிவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் சமமாக கருதி வழக்கு தொடர வேண்டும்.
இவ்வாறு மனுவில் ஜோசப் ஷைன் கூறியுள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘மனுவில் கூறப்பட்டுள்ள சட்டப்பிரிவு 497-ல் கூறப்பட்டுள்ள அம்சங்களை முதல் கட்டமாக பார்க்கும் போது மிகவும் பழமையான சட்டமாக உள்ளது. எனவே, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப இச்சட்டப்பிரிவை ஆராய்வது அவசியம்’ என்று கூறி, விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். மத்திய அரசு பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT