Published : 04 Oct 2023 12:30 PM
Last Updated : 04 Oct 2023 12:30 PM
புதுடெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இளநிலைப் பொறியாளர் தேர்வு வரும் 9ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணைய பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா கூறியிருப்பதாவது: மத்திய பணியாளர் தேர்வாணையம் "இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல்) தேர்வு, 2023-யை கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. இத்தேர்வை எழுத தென் மண்டலத்தைச் சேர்ந்த் 1,08,606 தேர்வர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர், சிராலா, விஜயநகரம் ஆகிய நகரங்களிலும், தெலங்கானாவில் ஹைதராபாத், வாரங்கல், கரீம்நகர் ஆகிய இடங்களிலும், தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களிலும் மற்றும் புதுச்சேரி என 20 நகரங்களில் 32 மையங்களில் இந்த தேர்வு நடைபெறும்.
இத் தேர்வு 09.10.2023 முதல் 03 நாட்கள் நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டுகளை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்களுடைய தேர்வு நாளுக்கு 4 நாட்களுக்கு முன்பு மட்டுமே இதனைப் பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வு குறித்த விவரங்கள் தேர்வர்களின் மொபைலுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தெற்கு மண்டல அலுவலக உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். லேண்ட்லைன் - 044-28251139, மொபைல்: 9445195946.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT