Published : 04 Oct 2023 06:46 AM
Last Updated : 04 Oct 2023 06:46 AM
லடாக்: லடாக் எல்லையில் (எல்ஏசி) தொடர் கண்காணிப்புப் பணிகளில் விமானப்படை ஈடுபட்டுள்ளதாக அதன் தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி கூறினார். இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
லடாக் பகுதியையொட்டி சீன நாட்டின் எல்லை அமைந்துள்ளது. இந்நிலையில் எதிரிகள் ஊடுருவ முடியாதபடி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தொடர் கண்காணிப்பில் நமது விமானப் படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. 97 தேஜஸ் ரக விமானங்கள் இந்தப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விரைவில் விமானப் படைக்கு எல்சிஏ தேஜஸ் ரக விமானங்களை கூடுதலாக வாங்கவுள்ளோம்.
தற்போது விமானப் படையில் பணியில் உள்ள மிக்-21 ரக விமானங்கள் 2025-ம் ஆண்டுக்குள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும். அதற்குப் பதிலாக அதிநவீன எல்சிஏ தேஜஸ் ரக விமானங்கள் படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. எல்லைப் பகுதியில் தொடர் கண்காணிப்பு மட்டுமல்லாமல், உளவுப் பணியை யும் செய்து வருகிறோம்.
மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நமது செயல்பாட்டுத் திட்டங்கள் மாற்றிக் கொள்ளப்படும். ஒரு பகுதியில் எதிரிகள் அதிகமாக இருக்கும் நிலையில் நாம் எதிர்கொள்ள முடியாதபோது, அங்கு அவர்களை சிறந்த உத்திகள் மூலம் எதிர்கொள்ளத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகி வரும் புவிசார் அரசியல் நிலப்பரப்பால் உருவாகும் சவால்களை எதிர்கொள்வதில் இந்திய விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய விமானப்படையானது தொலைதூரப் பகுதிகளை கண்காணிக்கவும், வேகமாக அடையவும், கடுமையாக தாக்கவும் திறன்களைப் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT