Published : 03 Oct 2023 04:30 PM
Last Updated : 03 Oct 2023 04:30 PM
ராய்ப்பூர்: “சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறதா?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுளார்.
பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிஹார் மாநிலத்தில் 63.14 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆதரித்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், பாஜக இதனை எதிர்க்கிறது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் ஜக்டால்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நாட்டின் வளங்களை அனுபவிக்கும் முதல் உரிமை சிறுபான்மையினருக்கேஎன்றார். ஆனால், காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறது. காங்கிரஸ் இந்துக்களைப் பிரிக்க முயற்சிக்கிறது. மக்கள் தொகையின் பெரும் பகுதியாக ஏழைகள் உள்ளனர். ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சியோ, நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமையை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சொல்கிறது. அப்படியென்றால், இப்போது காங்கிரஸ் சிறுபான்மையினரின் உரிமைகளை குறைக்க நினைக்கிறதா?
காங்கிரஸ் கட்சி இந்துக்களை பிரிக்க முயற்சிக்கிறது. ஏழைகளைப் பிரிக்க நினைக்கிறது. தேசத்தையே சிதைக்க நினைக்கின்றனர். ஆனால், எனக்கு எல்லோரையும்விட ஏழைகளே பிரதானம். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக தொடர்ந்து வேலை செய்வேன்" என்றார் மோடி.
முன்னதாக நேற்று பிரதமர் மோடி குவாலியரில் பேசியபோது, "காங்கிரஸ் கட்சி ஏழைகளின் உணர்வுகளோடு விளையாடுகிறது. 60 ஆண்டுகளாக அவர்கள் தேசத்தை சாதி ரீதியாக பிரித்தார்கள். இப்போது அதையே மீண்டும் செய்யவுள்ளனர். ஒரே பாவத்தை மீண்டும் செய்கிறது" என்று கூறியிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி வாக்குறுதி: முன்னதாக, மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் கலபிபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓபிசி) எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியும்” என்றது கவனிக்கத்தக்கது.
பிஹார் நிலவரம்: நாடு விடுதலை அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சியின்போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன்முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் நாடு முழுவதும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. நாடு விடுதலையடைந்த பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 1980, 1990களில் இடஒதுக்கீடு விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. ஆனாலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதன் பின்னர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அந்த புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை என்று பாஜக அரசு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, பிஹாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. இதற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனாலும் பிஹார் மாநில அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்து அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது.
பிஹார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.1 கோடியாகும். இவர்களில் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் 63.14 சதவீதம் உள்ளனர். இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01 சதவீதமும் உள்ளனர். ஆக மொத்தம் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14 சதவீதம் ஆகும். மேலும் மாநிலத்தில் வசிக்கும் பொதுப் பிரிவினர் 15.52 சதவீதமாக உள்ளனர். தலித் மக்கள் 19.65 சதவீதமும், பழங்குடி இனமக்கள் 1.69 சதவீதமும் மாநிலத்தில் வசிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
மேலும், மத ரீதியான கணக்கெடுப்பு விவரத்தின்படி இந்துக்கள் 81.99%, முஸ்லிம்கள் 17.7% , கிறிஸ்தவர்கள் 0.05%, சீக்கியர்கள் 0.01%; பவுத்த மதத்தினர் 0.08%, இதர மதத்தினர் 0.12% பிஹாரில் வசிக்கின்றனர். மாநிலத்தில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் 14.27 சதவீதம் வசிக்கின்றனர். யாதவ சமுதாய மக்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். பிஹார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும், யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.
எனவே, இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை 27 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் என்று தெரியவந்துள்ளது. மாநிலத்தில் 63.1 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிப்பதன் மூலம், மாநில மொத்த மக்கள் தொகையில் 3-ல் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டோர் எனத் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT