Published : 03 Oct 2023 11:56 AM
Last Updated : 03 Oct 2023 11:56 AM

மகாராஷ்டிராவின் நான்டெட் அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழப்பு - எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை | கோப்புப் படம்

மும்பை: மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ளது ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நேற்று 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மேலும் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் குழந்தைகள்.

உயிரிழப்புக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையின் டீன் ஷியாம் ராவ் வகோடே இதனை மறுத்துள்ளார். மருந்துகள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என தெரிவித்துள்ள அவர், உரிய கவனிப்பு கொடுக்கப்பட்டும் நோயாளிகள் ஒத்துழைப்பு அளிக்காததே உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறியுள்ளார். செப்டம்பர் 30ம் முதல் அக்டோபர் 1 வரை பிறந்த 3 நாட்களுக்குள் 12 குழந்தைகள உயிரிழள்ளதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

"குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 142 குழந்தைகள் சேர்க்கப்பட்டன. அவர்களில் 42 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் ஆகியவை உள்ளன. இவர்கள் அண்டை மாவட்டங்களான ஹிங்கோலி, பர்பானி, வாஷிம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். அண்டை மாநிலமான தெலங்கானாவின் கிராமங்களில் இருந்தும் சிலர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையின் டீன் ஷியாம் ராவ் வகோடே தெரிவித்துள்ளார்.

நான்டெட் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வயது வந்தவர்களில் 12 பேர் உயிரிந்துள்ளனர். அவர்களில் 5 பேர் ஆண்கள். 7 பேர் பெண்கள். இவர்களில் 4 பேர் இதயம் சார்ந்த பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்தனர். ஒருவர் விஷம் அருந்தியதாலும், ஒருவர் கல்லீரல் பிரச்சினை காரணமாகவும், இருவர் சிறுநீரக பாதிப்பு காரணமாகவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கலால் உயிரிழந்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் திலிப் மெய்சேகர் கூறுகையில், "இந்த துயர சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று நபர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நானும் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த சம்பவம் மிகப் பெரிய வலிமையும் வேதனையையும், கவலையையும் அளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் தானே நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்ததாகவும், அப்போது குறுகிய காலத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசு விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிப்பதாகவும், ஆனால், குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க அதனிடம் பணம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x