Published : 03 Oct 2023 11:00 AM
Last Updated : 03 Oct 2023 11:00 AM
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ராணிகுட்டாவில் கடந்த 28 ஆம் தேதி மிலாது நபி ஊர்வலம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் அங்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்வதால், மிலாது நபி ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே நேற்று முன் தினம் அங்கு மிலாது நபி ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதற்காக ராணிகுட்டா பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் திப்பு சுல்தானின் படம் மற்றும் வாசகம் அச்சிட்ட பேனரை வைத்தனர். இதற்கு அங்குள்ள பஜ்ரங் தளம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலர் அங்கிருந்த பேனரை கிழித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்களை துரத்திப் பிடித்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறுகையில், ''ஷிமோகாவில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் செயல்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்வார்கள்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT