Published : 03 Oct 2023 04:13 AM
Last Updated : 03 Oct 2023 04:13 AM
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை நேற்று சந்தித்தார். அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அண்ணாமலை அளித்த விளக்கங்களை, அமித் ஷாவிடம் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கிறார். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாஜக மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக - பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக தற்போது விலகியுள்ளது. இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (அக்.3) ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார்.
திடீர் டெல்லி பயணம்: இந்நிலையில், கோவையில் நடை பயணத்தில் இருந்த அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார்.
கூட்டணி கட்சியினரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தது தொடர்பாக அண்ணாமலையிடம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜகவின் சித்தாந்தம், எண்ணங்களின்படிதான் மாநிலத் தலைவர் செயல்பட வேண்டும். தனது சொந்த கருத்துகளை கூறி, அதன்படி நடந்துகொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், பாஜக மாநில தலைவர் பதவியை அண்ணாமலை விமர்சித்து பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. கூட்டணி கட்சியினரிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து அண்ணாமலைக்கு பல ஆலோசனைகளை அவர்கள் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை நேற்று மாலை சந்தித்தார்.
ஏற்கெனவே, கூட்டணி முறிவால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதிமுக இல்லாமல், பாஜகவால் பலமான கூட்டணி அமைக்க முடியுமா என்பது குறித்தும், பாஜக மேலிடத்தில் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நிர்மலா சீதாராமனுடன் நேற்று நடந்த சந்திப்பின்போது, கூட்டணி முறிவு விவகாரம் குறித்து பல்வேறு விளக்கங்களை அண்ணாமலை அளித்துள்ளார்.
நீண்ட நேர சந்திப்பு: நீண்ட நேரம் நடந்த இந்த சந்திப்பில், அண்ணாமலை அளித்த விளக்கங்களை, அமித் ஷாவிடம் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக அளிக்க இருக்கிறார்.
இதேபோல, ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் அண்ணாமலை அளித்த விளக்கங்களை அமித் ஷாவிடம் தெரிவிக்க உள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை: அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாஜக மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, தமிழக பாஜகவுக்கு புதிதாக மேலிட பொறுப்பாளர்களை நியமிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபயணத்தை அண்ணாமலை தொடர்ந்து மேற்கொண்டு, வெற்றிகரமாக நடத்தி முடிப்பார் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் கூட்டணி விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை எப்போது ஆலோசனை நடத்துவார் என்ற விவரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷும் கலந்து கொள்வார் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...