Published : 03 Oct 2023 05:13 AM
Last Updated : 03 Oct 2023 05:13 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பாஜக கவுன்சிலர் வீடுமீது குண்டுவீசப்பட்ட சம்பவத்தில் போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக அவர் தனக்கு தானே குண்டுவீசிக் கொண்டு நாடகம் ஆடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாநகராட்சியின் பைசுல்லாகன்ச், நான்காவது வார்டை சேர்ந்த பாஜக கவுன்சிலர் ராமு தாஸ் கனோஜா. இவர் மாண்டியா, தாவூத் நகர் பகுதியில் வசிக்கிறார்.
இந்நிலையில் அவரது வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு கையெறி குண்டுகள் வீசப்பட்டன. தொடர்ந்து அவரது வீட்டின் மீது கல்வீச்சும் நடத்தப்பட்டது. இதில் வீட்டின் முதல் தளத்தின் சுவரில் பதித்திருந்த டைல்ஸ்கள் உடைந்தன. பால்கனி கண்ணாடிகளும் சுக்குநூறாயின. இந்த தாக்குதலை தனது அரசியல் எதிரிகள் செய்திருப்பதாக மாண்டியா காவல் நிலையத்தில் கவுன்சிலர் ராமு தாஸ் புகார் அளித்திருந்தார். இதில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் அவர் கேட்டிருந்தார்.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார்வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, சம்பவம் நடந்த மறுநாள் ராமு தாஸின் கவுன்சிலர் அலுவலகத்தில் நடந்த மது விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில் சுமார் 5 பேர் ராமு தாஸ் அலுவலகத்தில் மது அருந்தியபடி அமர்ந்திருந்தனர். இவர்கள் இடையே அமர்ந்து காட்சியை பதிவு செய்தவர் தனது கைகளில் 3 வெடிகுண்டுகளையும் காட்டுகிறார். இதன் பின்னணியில், ‘நாயக் நஹி, கல்நாயக் ஹுன் மேன்..(நான் நாயகன் அல்ல வில்லன்...)’ எனும் இந்திப் பாடல் ஒலித்தபடி இருந்தது.
இதுகுறித்து மாண்டியா காவல் நிலைய ஆய்வாளர் சிவானந்த் மிஸ்ரா கூறும்போது, “கவுன்சிலர் வீட்டில் வெடித்த வெடிகுண்டு பாகங்களை ஆராய்ந்தபோது அவை அந்த காட்சிப் பதிவில் தெரியும் வெடிகுண்டுகளை போலவே உள்ளன. எனவே அந்த காட்சிப் பதிவில் இருந்த நால்வரையும் பிடித்து விசாரித்து வருகிறோம். இதில் கவுன்சிலர் ராமு தாஸ் ஆட்களை வைத்து தனது வீட்டில் தானே குண்டுகளை வீசிக்கொண்டிருக்கலாம். போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT