Published : 02 Oct 2023 01:16 PM
Last Updated : 02 Oct 2023 01:16 PM
புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். காலத்தால் அழியாத அவரது போதனைகள், நம் பாதையை ஒளிரச் செய்கின்றன. ஒட்டுமொத்த மனிதகுலத்திடமும் ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வை மேம்படுத்த ஊக்குவிக்கும் மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது. அவரது கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம். தான் கனவு கண்ட மாற்றத்தின் காரணியாக ஒவ்வொரு இளைஞரும் இருக்கவும், எங்கும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கவும் மகாத்மாவின் சிந்தனைகள் உதவட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது எளிமையும், தேசத்திற்கான அர்ப்பணிப்பும், ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற புகழ்பெற்ற முழக்கமும் இன்றும் எதிரொலிப்பதுடன், தலைமுறைகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சவாலான காலங்களில் அவரது தலைமைத்துவம் முதலியவை முன்மாதிரியாக உள்ளன. வலுவான இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாம் எப்போதும் பாடுபடுவோம்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT