Published : 02 Oct 2023 12:10 PM
Last Updated : 02 Oct 2023 12:10 PM
புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும், தேசிய புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷானவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷாஃபி உஸ்ஸாமா என்கிற ஷானவாஸ் டெல்லியில் தனது மறைவிடத்தில் பதுங்கி இருந்த போது, டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்தனர். பொறியியலாளராக இருந்து வந்த ஷானவாஸ் புனே ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தேடப்பட்டு வந்தார். டெல்லியைச் சேர்ந்தவரான இவர் புனேவுக்குச் சென்றார். கடந்த ஜூலை மாதம் புனோவில் கூட்டாளிகள் இருவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி வந்து டெல்லியில் மறைந்து வாழ்ந்து வந்தார். ஷானவாஸ் தலைக்கு என்ஐஏ ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்த நிலையில், டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பயங்கரவாதிகளையும் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடமிருந்து ஐஇடி வெடி தயாரிக்ககூடிய திரவம் உட்பட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT