Published : 02 Oct 2023 05:14 AM
Last Updated : 02 Oct 2023 05:14 AM
ஹைதராபாத்: தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தெலங்கானாவில் விரைவில் தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்படும். ரூ.900 கோடியில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள், ரயில்வே திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களை தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகுதான், மஞ்சளின் மகிமை அனைவருக்கும் தெரியவந்துள்ளது. மஞ்சள் குறித்து பல பரிசோதனைகள் நடந்து வருகின்றன. தெலங்கானா விவசாயிகள் அதிக அளவில் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நலனில் மத்திய அரசு அக்கறை காட்டி வருகிறது. விவசாயிகள் நலன் கருதி தெலங்கானாவில் விரைவில் தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்படும்.
பழங்குடியின தெய்வங்களான சம்மக்கா - சாரக்கா பெயரில் மொலுகு மாவட்டத்தில் ரூ.900 கோடியில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
தெலங்கானாவில் தற்போது ரூ.13,500 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பலருக்குவேலைவாய்ப்பு கிடைக்கும்.தெலங்கானாவில் பல்வேறு தேசியநெடுஞ்சாலைகளை அமைத்துள்ளோம். புதிதாக பல்வேறு சாலைகளை அமைக்க உள்ளோம். தேசிய நெடுஞ்சாலை திட்டங்களால் பல மாநிலங்களோடு தெலங்கானா இணைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புதிய 5 ஜவுளி பூங்காக்களில் ஒன்று தெலங்கானாவின் ஹஸ்மகொண்டாவில் அமைய உள்ளது. இதன்மூலம்வாரங்கல், கம்மம் மாவட்ட மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்க உள்ளது. இதையொட்டி, பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தெலங்கானாவின் பாலமூருக்கு சென்ற பிரதமர் மோடி, ‘பாஜக மக்கள் கர்ஜனை’ என்ற பெயரிலான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
அவர் பேசியபோது, ‘‘தெலங்கானாவில் எம்ஐஎம் (மஜ்லிஸ்) கட்சியின் கைப்பாவையாக ஆளும் பிஆர்எஸ் கட்சி உள்ளது. 2 குடும்பங்கள்தான் தெலங்கானாவை ஆள்கின்றன. சாமானிய மக்களின் பிரச்சினை குறித்து இந்த குடும்பங்களுக்கு கவலை இல்லை. தனியார் நிறுவனம்போல இவர்கள் குடும்ப ஆட்சி நடத்துகின்றனர். பல இடைத்தேர்தல்களில் தெலங்கானா மக்கள் பாஜக பக்கம் நின்றீர்கள். நீங்கள் விரும்பும் கட்சி விரைவில் தெலங்கானாவில் ஆட்சி அமைக்கும். ராணி ருத்ரம்மா போன்றவர்கள் பிறந்த மண் தெலங்கானா. அவரை போன்ற பலர் இனி சட்டப்பேரவையில் குரல் எழுப்புவார்கள். கடந்த 9 ஆண்டுகளில் தெலங்கானாவில் 2,500 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளோம். இதனால் போக்குவரத்து வசதி மேம்பட்டுள்ளது. விவசாய கடனை தள்ளுபடிசெய்வதாக கூறிய சந்திரசேகர ராவ் அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு,விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. ஆனால், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. பிஎம் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக நிதியுதவி செலுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடி தனிவிமானம் மூலம் டெல்லியில் இருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்தார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சரும், தெலங்கானா பாஜக தலைவருமான கிஷண் ரெட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். இந்த முறையும் பிரதமரை வரவேற்க முதல்வர் சந்திரசேகர ராவ், விமான நிலையம் வரவில்லை.
பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT