Published : 01 Oct 2023 05:03 AM
Last Updated : 01 Oct 2023 05:03 AM
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் கலபிபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் முதல் வேலையாக, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் (ஓபிசி) எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியும்.
மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் துறை செயலாளர்கள் உள்ளிட்ட 90 அரசு உயர் அதிகாரிகள்தான் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். கொள்கைகள் உருவாக்கம் மற்றும் சட்டம் இயற்றுவதில் பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த பங்கும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர்களுக்கு பதிலாக ஆர்எஸ்எஸ்அமைப்பினரும் அரசு உயர் அதிகாரிகளும் சட்டங்களை இயற்றுகிறார்கள்.
நாடு முழுவதும் நிலவும் ஊழலின் மையமாக மத்திய பிரதேசம் விளங்குகிறது. வியாபம் உள்ளிட்ட ஊழல்கள் புரட்டிப் போட்டுள்ளது. இங்கு எம்பிபிஎஸ் பட்டம் விற்கப்படுகிறது. தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி விடுகின்றன. இங்கு கடந்த 18 ஆண்டுகளில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். சராசரியாக தினமும் 3 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT