Published : 01 Oct 2023 05:09 AM
Last Updated : 01 Oct 2023 05:09 AM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மொத்தம் 6,650 கிராமங்கள் உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இவை அனைத்தும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பிளஸ் மாடல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கழிவறைகள் கட்டி பயன்பாட்டுக்கு வந்ததோடு, அங்கு திடக் கழிவு, கழிவுநீர் மேலாண்மை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சுவதற்கு குழிகள் அமைக்கப்பட்டன. இதற்காக துப்புரவுத் துறை சுமார் 4 லட்சம் கழிவுநீர் உறிஞ்சு குழிகளை அமைத்தது. சமைலறை கழிவுநீர் வீட்டுத் தோட்டங்களுக்கு செல்லும் வசதிகள் இருந்தால், அதற்கான வழிகளைசெய்ய மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
இதேபோல் குப்பைகளை அழிக்கவும், 1,50,000 சமுதாய குப்பை குழிகள் அமைக்கப்பட்டன. மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து, முறையாக கழிவுகளை அகற்ற 1,850 மையங்கள் அமைக்கப்பட்டன். ஜம்முகாஷ்மீரில் கழிவு மேலாண்மைமுறையாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஜம்மு காஷ்மீருக்கு திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத (ஓடிஎப்) பிளஸ் மாடல் அந்தஸ்து கிடைத்துள்ளது.
இவ்வாறு ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஓடிஎப் பிளஸ் அந்தஸ்தை பெற்றுள்ளன. அனைத்து தரப்பினரின் முயற்சியால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT