Published : 29 Sep 2023 10:31 PM
Last Updated : 29 Sep 2023 10:31 PM
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. அங்கு போக்குவரத்து, திரையரங்கம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல செயல்பட்டன.
வாட்டாள் கைது: பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை மீறி கன்னட அமைப்பினர் நேற்று பிரதான சாலைகளில் கண்டன ஊர்வலம் நடத்தினர். கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர்கள் நாராயண கவுடா, பிரவீன் ஷெட்டி, ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவர் சாரா கோவிந்த் ஆகியோரின் தலைமையில் டவுன் ஹாலில் தொடங்கி சுதந்திர பூங்கா வரை பேரணியாக சென்றனர்.
இந்த போராட்டத்துக்கு வாட்டாள் நாகராஜ் கறுப்பு புர்கா உடை அணிந்து வந்திருந்தார். அவர் தலைமையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் போலீஸார் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
முன்னதாக வாட்டாள் நாகராஜ், ''காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதால் கறுப்பு புர்கா அணிந்து வந்துள்ளேன். எங்களின் போராட்டத்தை எதிர்க்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார், பரமேஷ்வர் ஆகியோருக்கு கன்னட மக்கள் பாடம் புகட்டுவார்கள். அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்'' என தெரிவித்தார்.
விமான நிலையம் முற்றுகை: கன்னட அமைப்பினர் பெங்களூரு ரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்த முயற்சித்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக குறைவான பயணிகளே முன்பதிவு செய்திருந்ததால் பெங்களூரு வழியாக செயல்படும் 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நடிகர்கள் தர்ஷன், துனியா விஜய், துருவ் சர்ஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடக விவசாய சங்கத்தினர் மண்டியாவில் கே.ஆர்.சதுக்கம், மைசூருவில் அரண்மனை சாலை, அத்திப்பள்ளியில் சோதனை சாவடி ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர். மைசூரு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT