Published : 28 Sep 2023 01:59 PM
Last Updated : 28 Sep 2023 01:59 PM

‘வெறுப்பு பேச்சுக்கான வெகுமதி’: பாஜக எம்பி ரமேஷ் பிதுரிக்கான புதிய பொறுப்பு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பாஜக எம்பி ரமேஷ் பிதுரி | கோப்புப்படம்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் எம்பி ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டிருப்பதை ‘வெறுப்பு பேச்சுக்கான வெகுமதி’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

இதுகுறித்து, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தனது எக்ஸ் பதிவொன்றில், "வெறுப்புக்கு பாஜக வெகுமதி கொடுத்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பிஎஸ்பி எம்.பி. தனிஷ் அலியை பேசக்கூடாத வார்த்தைகளால் தாக்கிப்பேசிய பாஜக எம்.பி.,பிதுரியை ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக்கி பரிசு கொடுத்துள்ளது. டோங்கில் முஸ்லிம் மக்கள் தொகை 29.25 சதவீதம். இது அரசியல் பலன்களுக்கான வெறுப்பினை அடையாளப்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், "சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்" இது எல்லாம் அவர்களின் முட்டாள் தனம் என்று தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, "ஒரு முஸ்லிம் எம்பிக்கு எதிராக பேசியதற்கான வெகுமதியை பிதுரி பெற்றுள்ளார். ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கிய நபருக்கு பாஜக எப்படி புதிய பாத்திரத்தை வழங்கியுள்ளது? நரேந்திர மோடி ஜி இதுதான் சிறுபான்மையினருக்கான உங்களின் சிநேக பாவமா, அன்பின் எல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டின் தொகுதி உட்பட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளை டோங்க் மாவட்டம் கொண்டுள்ளது. இங்கு குஜார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். சச்சின் பைலட் இதே சமூகத்தைச் சேர்ந்தவரே. ரமேஷ் பிதுரியும் குஜார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வாக்குகளை பெறுவதற்கு பிதுரியின் நியமனம் உதவும் என்று பாஜக நம்புகிறது. ரமேஷ் பிதுரி டோங்க் மாவட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளராக செயல்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே ஜெய்பூரில் நடந்த டோங்க் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாக ரமேஷ் பிதுரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டம் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி. ஜோஷி தலைமையில் நடந்தது.

தெற்கு டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்பியான ரமேஷ் பிதுரி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, சக உறுப்பினரான பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்தை பேசி இருந்தார். ‘இது, இஸ்லாமிய வெறுப்பு பேச்சு’ என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தச் சூழலில் அவரிடம் விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. வெறுப்புணர்வை அவையில் வெளிப்படுத்திய ரமேஷ் பிதுரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியிருந்தார். அவர் பேசிய வார்த்தைகள் அவைக்கு உள்ளே மற்றும் வெளியே என எங்கும் பயன்படுத்த முடியாதவை என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x