Published : 28 Sep 2023 12:36 PM
Last Updated : 28 Sep 2023 12:36 PM

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

எம்.எஸ். சுவாமிநாதன் | கோப்புப் படம்

சென்னை: இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 98.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 11.20 மணி அளவில் அவர் உயிர் இழந்துள்ளார். அதே இல்லத்ததில் சுவாமிநாதனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சவும்யா சாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி முன்பே உயிரிழந்துவிட்டார்.எம்.எஸ். சுவாமிநாதன் குறித்த குறித்த முக்கிய தகவல்கள்.

  • கும்பகோணத்தில் 1925-ல் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்ததும், திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. ஆனால், வங்கத்தில் 1942-ல் ஏற்பட்ட பஞ்சம் இவரை மிகவும் பாதித்தது. வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். கோவை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
  • ஐபிஎஸ் அதிகாரியாக 1948-ல் தேர்வானார். ஆனால், பணியில் சேரவில்லை. பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தும், 1954-ல் நாடு திரும்பினார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வேளாண் துறையில் அரசுப் பணி கிடைத்தது.
  • 1960களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. ‘இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்’ என்று பல நாடுகள் கூறின. இதை பொறுத்துக்கொள்ள முடியாத இவர், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.
  • சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்தார். நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார்.
  • உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கினார். ‘பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு’ என்பார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை 1988-ல் நிறுவினார்.
  • இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.
  • கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
  • வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 98 ஆவது வயதில் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x