Published : 28 Sep 2023 12:51 PM
Last Updated : 28 Sep 2023 12:51 PM

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்ப மத்திய அரசு முடிவு

கோப்புப்படம்

புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் பல்வாலை வடகிழக்கு மாநிலத்துக்கு திரும்ப அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தற்போது ஸ்ரீநகரில் மூத்த காவல் கண்ணிப்பாளராக பணியாற்றி வரும் ராகேஷ் பல்வாலை முன்கூட்டியே அவரது சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்திற்கு உதவும் வகையில் அவர் பணியாற்ற முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை காரணமாக அங்கு கூடுதல் அதிகாரிகளின் தேவையைக் காரணம் காட்டி உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒரு மாதத்துக்கு பின்னர், அமைச்சரவையின் நியமனக் குழு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மணிப்பூரில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்யப்பட்ட உடன் வெளியான, இரண்டு மாணவர்களின் சடலங்களைக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அங்கு புதிய வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. புதன்கிழமை இரவு உரிபோக், யயிஸ்குல், சங்கோபந்த் மற்றும் டிரா பகுதிகளில் போராட்டக்கார்கள் பாதுகாப்பு படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப்படை வீரர்கள் பலசுற்றுக்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.

பாதுகாப்பு படையினர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க டயர்கள் எரித்தும், கற்கள், இரும்பு குழாய்களை சாலைகளில் போட்டும் தடுப்புகள் ஏற்படுத்தியிருந்தனர். போராட்டக்காரர்களால் டிசி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டதாகவும், 2 நான்கு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு தலைநகர் இம்பாலில் போராட்டம் மூண்டது. இதனைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் போராட்டக்காரர்கள் 45 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர். இதனிடையே இரண்டு மாணவர்களை கடத்தி கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். இந்த வழக்கினை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மணிப்பூரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் (AFSPA) மாநிலம் முழுவதையும் 'கலவரப் பகுதி’ (disturbed area) ஆக அம்மாநில அரசு அறிவித்தது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட 19 காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளைத் தவிர அக்.1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்நிலை 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x