Published : 27 Sep 2023 03:37 PM
Last Updated : 27 Sep 2023 03:37 PM

ம.பி. அதிர்ச்சி: பாலியல் வன்கொடுமைக்குப் பின் கிழிந்த ஆடையுடன் உதவி கோரி தெருவில் திரிந்த சிறுமி மீட்பு

உஜ்ஜைனி: மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் கிழிந்த ஆடைகளுடன் தெருவில் உதவி கோரி திரியும் காட்சி அடங்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பகுதியில் அந்தச் சிறுமி பல மணி நேரத்துக்கும் மேலாக சுற்றித் திரிந்த நிலையில், ஒரு வீட்டின் முன்னால் நின்று உதவி கேட்க, அங்கிருக்கும் நபர் அச்சிறுமியை விரட்டியடிக்கிறார். பின்னர், மாலை வேளையில் போலீஸார் அந்தச் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது உறுதியானது. அந்தச் சிறுமிக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் காட்சி வைரலான நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் பலவும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. இச்சம்பவம் பற்றி உஜ்ஜைனி நகரின் போலீஸ் எஸ்.பி. சச்சின் சர்மா கூறுகையில், "இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்துள்ளோம். பொதுமக்களும் இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தெரிந்தால் துப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறுமிக்கு அவருடைய பெயர், விலாசம் ஏதும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலேயே அவர் எந்தப் பகுதியில் இருந்து வந்திருப்பார் போன்ற தகவல்களைத் திரட்ட முயற்சித்து வருகிறோம். அந்தப் பகுதியில் சென்ற வாகனங்களின் அடையாளங்களையும் திரட்டி வருகிறோம்" என்றார்.

இது குறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், "இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. குற்றவாளிகள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உதவி கோரி தெருத்தெருவாக திரிந்து கடைசியிலி சாலையில் மயங்கி விழுந்த சம்பவம் மனிதகுலத்துக்கே அவமானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x