Last Updated : 27 Sep, 2023 05:39 AM

1  

Published : 27 Sep 2023 05:39 AM
Last Updated : 27 Sep 2023 05:39 AM

மத்திய பிரதேச தேர்தல் | 3 மத்திய அமைச்சர்கள் உட்பட 7 எம்.பி.க்கள் போட்டி: 5-வது முறையாக ஆட்சியைத் தொடர பாஜக புதிய உத்தி

புதுடெல்லி: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் போட்டியிடுகின்றனர். இது, இம்மாநிலத்தில் 5-வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்க அதன்புதிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

ம.பி.யில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக4 -வது முறையாக ஆட்சியை தொடர்கிறது. இதனால் மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலையும் உள்கட்சி பூசலும் அதிகரித்து வருகிறது.

இதேபோன்ற சூழல் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலின்போதும் நிலவியது. இதன் காரணமாக 4-வது முறையாக முதல்வர் வேட்பாளராக்கப்பட்ட சிவராஜ் சிங்கிற்கு தோல்வி கிட்டியது. கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எனினும் இந்த ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா உதவினார்.

இந்நிலையில் அடுத்த ஓரிரு மாதங்களில் வரும் ம.பி. தேர்தலிலும் பாஜகவிற்கு மீண்டும் அதே சிக்கல் உருவாகி விட்டது. இதை சமாளிக்க பாஜக தலைமை புதிய உத்தியை கையாள்கிறது.

இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைக்கிறது. இதுவன்றி தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் 11 பேருக்கு அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது. இதனால் மாநிலத் தலைவர்கள் பெரிதாகப் பிரச்சினை செய்ய மாட்டார்கள் என பாஜக தலைமை கருதுகிறது.

ஒவ்வொரு எம்.பி.க்கும் சுமார் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் மக்களிடம் செல்வாக்கு இருப்பதுண்டு. இதுபோன்ற எம்பிக்களை பாஜக தேர்வு செய்துள்ளது. இவர்களின் போட்டியால் சுற்றியுள்ள தொகுதிகளிலும் தாக்கம்ஏற்படும் என பாஜக எதிர்பார்க்கிறது. இதுபோல் செல்வாக்குடன் வெற்றி பெறும் எம்.பி.யையே அடுத்த முதல்வராக அமர்த்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல், பக்கன் சிங் குலாஸ்தே உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

39 வேட்பாளர்கள்: 230 தொகுதிகளுக்கானப் போட்டியில் இதுவரை 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள வேட்பாளர்கள் தேர்விலும் பாஜக தலைமை அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதிலும் மத்திய அமைச்சர்கள் பெயர் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் பெயர் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மூத்த தலைவர்களில் பலர் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு தேர்தலை சந்திக்கின்றனர். இதுபோன்ற புதுப்புது உத்திகளின் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார். இதற்காக அவர், ம.பி. முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வெற்றிக்கானச் சூழலை கண்டு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x