Published : 27 Sep 2023 05:58 AM
Last Updated : 27 Sep 2023 05:58 AM
புதுடெல்லி: ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 51,000 பேருக்கு மத்திய அரசு பணி நியமனத்துக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார்.
மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இதன்தொடர்ச்சியாக 9-வது ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 46 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று நாடு முழுவதும் 51,000 பேருக்குமத்திய அரசு பணி நியமனத்துக்கான ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: கடின உழைப்பின் மூலம் மத்திய அரசு பணி வாய்ப்பை பெற்ற இளைஞர்களை வாழ்த்துகிறேன். இன்றைய தினம் உங்கள் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. நாட்டின் லட்சிய இலக்குகளை எட்ட நீங்கள் முதல் வரிசையில் நின்று பணியாற்ற வேண்டும்.
இந்தியா இப்போது பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இன்றைய தினம் ஏராளமான பெண்கள் மத்திய அரசு பணிநியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். அவர்களை வாழ்த்துகிறேன்.
21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியா உதயமாகி வருகிறது. அண்மையில் நிலவில் இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. இதேபோல அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இதில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது. மத்திய அரசு ஊழியர்கள், மக்கள் நலனுக்கு முதலிடம் அளித்து பணியாற்ற வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். மத்திய அரசு பணியில் புதிதாக இணைந்திருக்கும் இளைஞர்கள் தங்கள்பணியிடங்களில் தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் அரசு துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் ஆட்சி நிர்வாகம் மேம்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் எளிதாக டிக்கெட் எடுக்கின்றனர்.
ஏழைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஊழியர்கள் முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT