Published : 26 Sep 2023 08:48 AM
Last Updated : 26 Sep 2023 08:48 AM

மணிப்பூர் வன்முறை | சமூக வலைதளங்களில் பரவிய மாணவர்கள் புகைப்படம்: மாநில அரசு விளக்கம்

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர்

இம்பால்: மணிப்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இணைய சேவை முடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான இரண்டு மாணவர்கள் சடலங்களின் புகைப்படத்தால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் காணாமல் போன அந்த இரு மாணவர்களின் சடலம் அடங்கிய புகைப்படங்கள் வெளியான நிலையில் இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படு என்று மாநில அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இரண்டு மாணவர்களின் புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இறந்துபோன மாணவர்கள் ஹிஜாம் லின்தோயின்காம்பி (17), பிஜாம் ஹேம்ஜித் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாணவர்களும் கடந்த ஜூலையில் காணாமல் போனவர்கள். மணிப்பூர் வன்முறை வழக்கு ஏற்கெனவே சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மக்கள் விருப்பத்தின் பேரில்தான் வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது வெளியான புகைப்படம் தொடர்பாக உறுதியான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும். இந்த கொடுங் குற்றத்தை செய்தவர்களுக்கு நிச்சயமாகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்

அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது அந்த இரண்டு மாணவர்களும் ஏதோ ஓர் ஆயுதக் குழுவின் வனப்பகுதி கூடாரத்தில் இருப்பது புலப்படுகிறது. அந்த மாணவர்கள் படுகொலையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் மணிப்பூர் காவல்துறையினரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தின் பின்னணி: மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மைதேயி சமூகத்தில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குகி, நாகா சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குகி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர்.

மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வனப்பகுதி மீட்புப் பணி என்ற பெயரில் குகி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில் குகி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3-ம் தேதி போராட்டம் தொடங்கினர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். இந்தச் சூழலில் பல மாதங்களுக்குப் பின்னர் இணைய சேவை முடக்கம் நீக்கப்பட்டதும் வைரலான இரண்டு மாணவர்களின் புகைப்படம் பதற்றத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதால் மாநில அரசு தலையிட்டு அறிக்கை வெளியிட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x