Published : 26 Sep 2023 08:10 AM
Last Updated : 26 Sep 2023 08:10 AM

10-க்கு 8 மதிப்பெண்கள் வழங்கி பிரதமர் மோடியை பாராட்டிய ஒடிசா முதல்வர்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்: ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நவீன்பட்நாயக் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

வெளிநாட்டு உறவு தொடர்பான மத்திய அரசின் கொள்கைகள் சிறப்பாக உள்ளன. நாட்டில் பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாக உள்ளது. அவரது செயல்பாடுகளுக்கு 10-க்கு 8 மதிப்பெண்கள் அளிப்பேன். ஊழலை ஒழிக்க அவர் முடிந்த வரை உதவி செய்து வருகிறார். அத்துடன் இந்த நாட்டின் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

மத்திய அரசுடன் ஒடிசா மாநில அரசுக்கு சுமூகமான உறவு இருக்கிறது. எங்கள் ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சி மிகவும் முக்கியம். அதற்கு மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு மிகமிக முக்கியம். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது மிகவும் முக்கியமான நடவடிக்கை. பெண்களின் முன்னேற்றம், அதிகாரம் ஆகியவற்றுக்கு பிஜு ஜனதா தளம் கட்சி எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. ஒடிசாவில் எனது தந்தை பிஜு பட்நாயக் ஆட்சியின் போது உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கினார். தற்போது அந்த எண்ணிக்கையை நாங்கள் 50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம்.

இவ்வாறு முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, சிஏஏ, முத்தலாக், ஆர்டிஐ சட்டத் திருத்தம், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370-வது சட்டப்பிரிவை நீக்கும் முடிவு, டெல்லி நிர்வாக சீர்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் உட்பட பல விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக முதல்வர் நவீன் பட்நாயக் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x