Published : 26 Sep 2023 07:03 AM
Last Updated : 26 Sep 2023 07:03 AM
பாட்னா: பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐஜத - ஆர்ஜேடி கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாட்னா மாவட்டம், மோசிம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த தலித் தொழிலாளி ஒருவர் ரூ.1,500 கடன் வாங்கியிருந்தார். அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை.
கடன் வாங்கிய தொழிலாளியின் மனைவி கடந்த 23-ம் தேதி இரவு குடிநீர் பிடிப்பதற்காக குடத்துடன் பொது குழாயடிக்கு சென்றார். அப்போது பிரமோத்தும் அவரது கூட்டாளிகளும் தொழிலாளியின் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கடன் மற்றும் வட்டி பணத்தை தருமாறு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். பிரமோத்தின் மகன் அன்சூ குமார், பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்தார்.
உயிரைக் காப்பாற்ற அந்த பெண் ஆடையில்லாமலேயே வீட்டுக்கு தப்பியோடி வந்துவிட்டார். தனக்கு நேர்ந்த கொடுமையை கணவர், உறவினர்களிடம் அவர்கண்ணீர் மல்க கூறினார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஜிதேந்திர சிங் கங்குவார் கூறும்போது, “இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து பிரமோத் குமார், அவரது மகன் அன்சூ குமார் உட்பட 6 பேரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார். இதற்கிடையில், ரூ1,500 கடனை கொடுத்து விட்டதாகவும் அதன்பிறகும் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT