Published : 26 Sep 2023 07:17 AM
Last Updated : 26 Sep 2023 07:17 AM

சனாதனத்தை அழிக்க காங்கிரஸ் முயற்சி: போபால் பாஜக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி

போபால்: பாரதிய ஜன சங்கத்தின் முன்னோடியான தீன்தயாள் உபத்யாயாவின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பாஜக தொண்டர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிக நீண்ட காலம் ஆட்சி நடத்தியது. ஆனால் ஊழல் ஆட்சியால் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. யுபிஐ திட்டம் கொண்டு வரப்பட்டபோது மிகக் கடுமையாக விமர்சித்தது. இப்போது யுபிஐ பணப் பரிமாற்றத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மோடி என்றால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று அர்த்தம். பாஜக அளித்த வாக்குறுதிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அந்த கட்சி ஆட்சியில் இருக்கும்வரை வறுமை ஒழிக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்.

காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அழிக்க முயற்சிக்கின்றன. இந்த கட்சிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸில் ஜனநாயகம் இல்லை. குடும்ப வாரிசு அரசியலை அந்த கட்சி பின்பற்றுகிறது. செல்வச் செழிப்பில் பிறந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைகளின் வலி, வேதனை தெரியவில்லை.

பாஜக ஆட்சியில் ஏழைகள், பெண்கள், நலிவுற்றோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பலன் அடைந்து வருகின்றனர். ம.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x