Published : 25 Sep 2023 07:35 PM
Last Updated : 25 Sep 2023 07:35 PM
பாட்னா: பாஜகவின் மறைந்த தலைவர் தீன்தயாள் உபாத்யாயவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நிதிஷ் குமார் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துவந்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுக்கு எதிரான அணியை தேசிய அளவில் கட்டமைக்க முயற்சிகளை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்றது. இந்நிலையில், பாஜகவின் முந்தைய அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் தீன்தயாள் உபாத்யாயவின் பிறந்த நாளை முன்னிட்டு, பாட்னாவில் உள்ள அவரது சிலைக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த நிதிஷ் குமார், "தீன்தயாள் உபாத்யாயவின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒன்று. அதன்படி நடைபெற்ற அரசு விழாவில் நான் பங்கேற்றேன். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். அனைவரோடும் இணைந்து பணியாற்றி வருகிறோம். மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக எதிர்காலத்திலும் இது தொடரும். பாஜக கூட்டணியோடு நெருங்கவில்லை. இண்டியா கூட்டணியை ஒருங்கிணைக்க நான் பணியாற்றியதை அனைவரும் அறிவார்கள். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை" என தெரிவித்தார்.
தீன்தயாள் உபாத்யாயவின் சிலைக்கு நிதிஷ் குமார் மரியாதை செலுத்தியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிஹார் பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி, "பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் பணிகளால் ஈர்க்கப்பட்டு அவர் இவ்வாறு மரியாதை செலுத்தி இருந்தால், அது வரவேற்கத்தக்கது" என தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், "பாஜக மூத்த தலைவரும் பிஹார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கதவு நிதிஷ் குமாருக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை இரண்டு முறை கூறி இருக்கிறார். வாக்குகளை கவரக்கூடிய தலைவர் அல்ல நிதிஷ் குமார்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT