Published : 24 Sep 2023 05:39 PM
Last Updated : 24 Sep 2023 05:39 PM
புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். தெலங்கானாவில் வெற்றி பெறலாம். ராஜஸ்தானில் போட்டி நெருக்கமாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். தெலங்கானாவில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. அங்கே பாஜகவின் செல்வாக்கு முற்றிலும் போய்விட்டது. ராஜஸ்தானில் போட்டி நெருக்கமாக இருக்கிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதனால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.
பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரியின் தரம்தாழ்ந்த விமர்சனம் எல்லாம் அவர் சார்ந்த கட்சியின் திசை திருப்பும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே பகுஜன் சமாஜ் எம்.பி. டானிஷ் அலியை பாஜக எம்.பி. அவ்வளவு தரக்குறைவாக விமர்சித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதும் மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சியே.
இந்தியாவின் உண்மையான பிரச்சினைகளாக ஒருசிலரிடம் மட்டுமே செல்வம் குவிந்திருத்தல், மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பின்மை, தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியின சமூகத்தினருக்கு எதிரான அநீதி, விலைவாசி உயர்வு ஆகியன இருக்கின்றன.
இவற்றையெல்லாம் பாஜகவால் இப்போது எதிர்கொள்ள இயலாது. ஆகையால், அவர்கள் பிதூரியை பேச வைத்துள்ளனர். இத்தகைய பேச்சு, ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை மாற்றுதல் ஆகிய அனைத்துமே திசைதிருப்பும் முயற்சிதான். எங்களுக்கு அது புரியும். ஆனால் அவற்றைச் செய்ய நாங்கள் அவர்களை அனுமதிக்கப்போவதில்லை.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு முக்கியமான பாடம் கற்றுக் கொண்டது. பாஜக திசைதிருப்பும் முயற்சிகளாலேயே தேர்தல்களை வெல்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம். இப்போதெல்லாம் நாங்கள் ஆக்கபூர்மான விஷயங்களை மக்கள் முன்னால் வைக்கிறோம். அது எங்களுக்கு வெற்றியைத் தருகிறது.
முன்பு செய்ததுபோல் இன்றும்கூட சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து திசைதிருப்பவே, பிதூரி, நிஷிகாந்த் துபே மூலம் சர்ச்சைகளை பாஜக உருவாக்குகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அதை பாஜக விரும்பவில்லை. எப்போதெல்லாம் மிக முக்கியமான பிரச்சினையை விவாதிக்க முயற்சிக்கிறோமோ அப்போதெல்லாம் அவர்கள் இதுபோன்ற சர்ச்சைகளை உருவாக்குவார்கள். பாஜகவுக்கு 2024 மக்களவைத் தேர்தலைப் பார்த்து அச்சம்வந்துவிட்டது.
இந்திய ஒற்றுமை யாத்திரை ஏன் அவசியம் என்பதை அதன் முதல் பகுதியில் உணர்ந்து கொண்டேன். எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் அது தேசிய ஊடகங்களில் திரித்துச் சொல்லப்படுகின்றன. அதற்கு பாஜக அழுத்தம் காரணமாக இருக்கிறது. ஆனால் எல்லா அழுத்தங்களையும் முறியடிக்கும் வகையில் நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்தோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT