Published : 24 Sep 2023 04:42 AM
Last Updated : 24 Sep 2023 04:42 AM

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 78-வது கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் ககர் பேசும்போது, "இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது அவசியம்" என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஐ.நா. பொதுச் சபைக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கலாட் பேசியதாவது: தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ பாகிஸ்தான் 3 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிறுத்துவதுடன் அதற்கான கட்டமைப்புகளை உடனடியாக மூட வேண்டும்.இரண்டாவதாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். மூன்றாவதாக, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். இந்தியாவின் உள்விவகாரங்கள் பற்றி கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை. மனித உரிமைகள் விவகாரத்தில் உலகில் மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன் பாகிஸ்தான் தனது வீட்டை ஒழுங்குபடுத்துவது நல்லது.

இந்தியாவுக்கு எதிராக அடிப்படையற்ற மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள இந்தஅவையை பாகிஸ்தான் தவறாகப்பயன்படுத்துகிறது.

மனித உரிமைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெறும் மோசமான சம்பவங்களில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் இவ்வாறு செய்கிறது.

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது. 2011-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு பெடல் கலாட் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x