Published : 24 Sep 2023 03:57 AM
Last Updated : 24 Sep 2023 03:57 AM
வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.451 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
வாரணாசி ரிங் சாலை அருகேயுள்ள காஞ்சரி பகுதியில் 30.6 ஏக்கர் பரப்பில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு சார்பில் ரூ.121 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்காக பிசிசிஐ சார்பில் ரூ.330 கோடி செலவிடப்படுகிறது.
மொத்தம் ரூ.451 கோடியில் அமைக்கப்படும் இந்த கிரிக்கெட் மைதானத்தில் ஒரே நேரத்தில் 30,000 பேர் அமர முடியும்.
வாரணாசி எம்.பி.யான பிரதமர் மோடி, புதிய மைதானத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஆகஸ்ட் 23-ல் நிலவின் தென் துருவத்தில் இந்தியா கால்பதித்தது. அந்த இடத்துக்கு சிவசக்தி எனப் பெயர் சூட்டப்பட்டது. செப்டம்பர் 23-ல் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்த இடமும் சிவசக்தி மையமாகத் திகழும்.
கிரிக்கெட் வெறும் விளையாட்டு கிடையாது. இது உலகத்தை ஒன்றிணைத்து வருகிறது. புதிய நாடுகள் கிரிக்கெட் விளையாட்டில் இணைந்து வருகின்றன. இதனால் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மைதானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அந்த வகையில் வாரணாசியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது.
வாரணாசி மைதானத்தின் வடிவமைப்பு முழுமையாக சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. புதிய கிரிக்கெட் மைதானத்தால் ஹோட்டல்கள், வாடகை கார்கள், ஆட்டோக்கள், படகுகளை இயக்குவோருக்கு வருவாய் அதிகரிக்கும்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் மட்டுமன்றி, விளையாட்டிலும் கவனம் செலுத்த ஊக்குவித்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே வாரணாசியில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் முதல் ஒலிம்பிக் வரை இந்திய வீரர்கள் முன்னேறி வருகின்றனர். வீரர்கள் மட்டுமன்றி, வீராங்கனைகளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். கிராமம், நகரங்களில் உள்ள திறமையான வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களை மேம்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் விளையாட்டு ஒரு பாடமாக உள்ளது. இந்த மைதானம் எதிர்கால இந்தியாவின் அடையாளமாக மாறும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் ஜெய் ஷா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, கபில்தேவ், திலீப் வெங்சர்க்கார், மதன் லால், குண்டப்பா விஸ்வநாத், கோபால் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மைதானத்தின் வடிவமைப்பு சிவனை மையமாகக் கொண்டிருக்கும். மைதானத்தின் கூரை, பிறை வடிவில் இருக்கும். தூண்கள் திரிசூல வடிவில் இருக்கும். மைதானத்தின் இருக்கைகள், கங்கை நதியின் படித்துறையை ஒத்திருக்கும்.
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் எல் அண்ட் டி நிறுவனம், 30 மாதங்களில் மைதானத்தை கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
அடல் பள்ளிகள் திறப்பு: உத்தர பிரதேசம் முழுவதும் ரூ.1,115 கோடியில் 16 அடல் உறைவிடப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் மோடி வாரணாசியில் நேற்று தொடங்கிவைத்தார். கரோனா காலத்தில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து, வாரணாசியின் காஞ்சரியில் 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, மகளிர் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக பிரதமருக்கு பெண்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT