Published : 24 Sep 2023 05:35 AM
Last Updated : 24 Sep 2023 05:35 AM

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரின் ஜலந்தர் சொத்துகளை முடக்கியது என்ஐஏ

தடைசெய்யப்பட்ட ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’(எஸ்எப்ஜே) அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னுவுக்கு சொந்தமான சண்டிகரில் உள்ள வீட்டை என்ஐஏ அதிகாரிகள் நேற்று முடக்கினர். படம்: பிடிஐ.

புதுடெல்லி: கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜாருக்கு சொந்தமான பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று முடக்கியது.

காலிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் கடந்த ஜூன் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கனடா குடியுரிமை பெற்றவர். இவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. இது இரு நாடுகள் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டு அபத்தமானது என்று இந்தியாகூறியுள்ளது. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பதை திசை திருப்புவதற்காக இந்த குற்றச்சாட்டு கூறப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹர்தீப் சிங்நிஜாருக்கு சொந்தமான பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொத்துகளை என்ஐஏ அதிகாரிகள் நேற்று முடக்கினர். மேலும், இந்தியாவில் தேடப்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள் 43 பேரின் பட்டியலையும் என்ஐஏ வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கனடாவுடன் தொடர்புடையவர்கள். லாரன்ஸ் பிஷ்னாய், ஜஸ்தீப் சிங், கலா ஜதேரி என்ற சந்தீப், வீரேந்தர பிரதாப் என்ற காலா ரானா மற்றும் ஜொகிந்தர் சிங் ஆகியோரின் பெயர்களை வெளியிட்டுள்ள என்ஐஏ, இவர்களின் சொத்துகள் பற்றி விவரத்தை பொதுமக்கள் மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் நியூயார்க்கில் வசிக்கும் எஸ்எப்ஜே சீக்கிய அமைப்பின் தலைவர், குருபத்வந் சிங் பன்னுவுக்கு சொந்தமான சண்டிகரில் உள்ள சொத்துகளையும் என்ஐஏ முடக்கியுள்ளது. இவர் கனடாவில் உள்ள இந்துக்கள், கனடாவை விட்டு வெளியேறி இந்தியா திரும்ப வேண்டும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x