Published : 24 Sep 2023 05:40 AM
Last Updated : 24 Sep 2023 05:40 AM
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருவதால், பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தின. கர்நாடக மாநில விவசாய சங்கத்தினர், கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், மண்டியா விவசாயிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் பெங்களூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ராம்நகர் ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் காவிரி நீர்திறப்பதற்கு எதிராக கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது. பெங்களூருவில் தமிழர்கள் மீதும்,தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. மண்டியாவில் தமிழ் காலனி பகுதியில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
உள்துறை அமைச்சர் ஆலோசனை: இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா நேற்றுகாவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு ஆணையிட்டார்.
அவசர ஆலோசனை: இதையடுத்து பெங்களூருவில் மாநகர காவல் ஆணையர் தயானந்தா காவல் துறை உயர்அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழர்கள் அதிகமாக வாழும் சிவாஜிநகர், அல்சூர், டேனரி சாலை, ஆஸ்டின் டவுன், விவேக் நகர், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாகன சோதனை, ரோந்து பணிகள், சிசிடிவி மூலம் கண்காணிப்பு ஆகிய பணிகளிலும் ஈடுபட்டனர்.
இதேபோல மண்டியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ் காலனி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு ஆகியஇடங்களில் தமிழக பேருந்துகள் நிற்கும் இடம், எல்லையோர சோதனை சாவடிகள், தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட் டுள்ள திரையரங்கங்கள் ஆகிய வற்றுக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 26-ம் தேதி..: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து பெங்களூருவில் வரும் 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு கர்நாடக தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உட்பட 100க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT