Published : 23 Sep 2023 03:38 PM
Last Updated : 23 Sep 2023 03:38 PM

இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான நாக்பூர்; மீட்புப் பணியில் மத்தியப் படைகள்

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த திடீர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களை அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் சூழல் உருவானது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நாக்பூர் விமான நிலையப் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் 106 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. திடீர் கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கையாக இன்று நாக்பூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில், மழை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இடைவிடாத கனமழையால் அம்பாசாரி ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான வசிப்பிடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. நகரின் பிற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தார்.

நாக்பூர் ஆட்சியர், நகராட்சி ஆணையர், காவல் ஆணையாளர் ஆகியோருக்கு மீட்பு, நிவாரணப் பணிகளை துரித கதியில் மேட்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார். திடீர் மழை வெள்ளத்தால் சிக்கிய மக்களை மீட்பதில் மத்தியப் படைகளும் இணைந்து கொண்டன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், ராணுவக் குழு ஒன்று அமாசாரி ஏரிப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. நாக்பூரில் உள்ள செவித் திறன் சவால் கொண்ட பள்ளியைச் சேர்ந்த 40 குழந்தைகள் உள்பட 180 பேர் காப்பாற்றப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன், மக்கள் அநாவசியமாக வெளியில் வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. நகரெங்கும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

நகர் முழுவதும் பரவலாக இன்று இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நாக்பூர் மையம் எச்சரித்துள்ளது. பாந்த்ரா, கோண்டியா மாவட்டங்கள் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வார்தா, சந்திராபூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அமராவதி, யவத்மால், காட்சிரோலியில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x