Published : 23 Sep 2023 02:10 PM
Last Updated : 23 Sep 2023 02:10 PM

“இது மோடி மல்டிபிளக்ஸ்...” - புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மீதான ஜெயராம் ரமேஷின் விமர்சனப் பார்வை

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடம் நெருக்கடி மிகுந்ததாக உள்ளது என்றும், 2024 ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அது 'சிறப்பாக' பயன்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின்போது, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், இந்த கட்டிடம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடம் உண்மையில் பிரதமரின் நோக்கங்களை நன்றாகவே உணர்த்துகிறது. அதை மோடி மல்டிபிளக்ஸ் என்று அழைக்க வேண்டும். கட்டிடக் கலை ஜனநாயகத்தை கொல்லும் என்றால், அது தற்போது நடந்திருக்கிறது. அரசியலமைப்பை மாற்றி எழுதாமல் பிரதமர் மோடி இதில் வெற்றி பெற்றுள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு, நான் கண்டது குழப்பங்களும், உரையாடல்களின் இரைச்சலும்தான். இரு அவைகளுக்குள்ளும், லாபிகளிலும் ஒரே இரைச்சல்தான்.

அரங்குகள் வசதியாகவோ அல்லது கச்சிதமாகவோ இல்லாததால் ஒருவருக்கொருவர் பார்க்க தொலைநோக்கிகள் தேவை. பழைய நாடாளுமன்றக் கட்டிடம் வெளிச்சம் நிறைந்ததாக இருந்தது. அதோடு, உரையாடல்களை எளிதாக்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை, சென்ட்ரல் ஹால் மற்றும் தாழ்வாரங்களுக்கு இடையே நடப்பது எளிதாக இருந்தது.

புதிய நாடாளுமன்றத்தை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான பிணைப்பை அதில் உள்ள சூழல் பலவீனப்படுத்துகிறது. இரு அவைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் சிக்கலாக உள்ளது. பழைய கட்டிடத்தில், நீங்கள் தொலைந்து போனால், அது வட்டமாக இருந்ததால் மீண்டும் உங்கள் வழியை உங்களால் கண்டுபிடிக்க முடியும். புதிய கட்டிடத்தில் நீங்கள் வழி தவறினால், நீங்கள் ஒரு பிரமையில் தொலைந்து போவீர்கள். புதிய கட்டிடம், நெருக்கடியும் அச்சமும் சூழ்ந்த ஓர் இடமாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் இருப்பதில் இருந்த மகிழ்ச்சி தற்போது மறைந்துவிட்டது. பழைய கட்டிடத்துக்குச் செல்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் வலி நிறைந்ததாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எனது சகாக்களில் பலர் இதையே உணர்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு, தங்களின் பணியைச் செய்வதற்கு எளிதாக இல்லை என்று நாடாளுமன்றச் செயலக ஊழியர்கள் கூறுகிறார்கள். கட்டிடத்தைப் பயன்படுத்தும் நபர்களுடன் எந்த ஆலோசனையும் செய்யப்படாதபோது இதுதான் நடக்கும். 2024-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு சிறந்த பயன்பாடு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

பாஜக சாடல்: ஜெயராம் ரமேஷின் இந்தக் கருத்தை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். “கீழான நிலைக்குச் சென்றுவிட்ட காங்கிரஸ் கட்சியின் பரிதாபமான மனநிலை இது. 140 கோடி மக்களின் விருப்பத்துக்கு எதிராக அவர்களை அவமதிக்கும் செயல் இது. நாடாளுமன்றத்துக்கு எதிராக இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு இது முதல்முறை அல்ல. 1975-ல் அவர்கள் முயன்று மோசமாக தோற்றுப்போனார்கள்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் நட்டா விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x