Last Updated : 18 Dec, 2017 11:30 AM

 

Published : 18 Dec 2017 11:30 AM
Last Updated : 18 Dec 2017 11:30 AM

குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தை நோக்கி பாஜக 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த இரு மாநிலங்களிலும் காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பகல் 12 மணிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும். இதற்கிடையில் தற்போதைய நிலவரப்படி இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

மோடி அலை ஓயவில்லை..

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் நரேந்திர மோடி களத்தில் இல்லை என்பதால் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதன் காரணமாகவே, குஜராத்தைப் பொறுத்தவரையில் கடந்த 22 ஆண்டுகளாக உள்ள ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பிரச்சாரத்தை பிரதமர் மோடியே தலைமையேற்று நடத்தினார்.

தற்போது அதற்கேற்ற பலன் கிடைத்ததுபோல் முன்னிலை நிலவரங்கள் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் சூழலை தெரிவிக்கின்றன. குஜராத்தில் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்றது. அடுத்தடுத்த கட்டங்களிலும் பாஜக முன்னிலை பெற்றது. இடையில் சிறிது நேரம் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே போட்டாபோட்டி நிலவியது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த நிலை மாறியது. காலை 11.15 மணி நிலவரப்படி குஜராத்தில் பாஜக 106 தொகுதிகளிலும் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் முறையே முன்னிலை வகிக்கின்றன.காங்கிரஸ், ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி என பலமுனைப் போட்டிகள் நிலவியபோதும் பாஜக 106 தொகுதிகளில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் தேர்தல் முடிவுகள் வரும் 2019-ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் கருதப்பட்ட சூழலில் இந்த முன்னிலை நிலவரம் 2019-ம் தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கே சாதகமாக இருக்குமோ என்ற விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இமாச்சலில் எதிர்பார்த்தபடியே..

இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை எதிர்பார்த்ததுபடியே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. முதல்வர் வீர்பத்ர சிங், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் உட்பட முக்கிய பிரபலங்கள் மீண்டும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸும் பாஜகவும் 68 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தற்போதைய நிலவரப்படி பாஜக 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23  இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்த முன்னிலை நிலவரப் போக்கு பாஜகவுக்கு எளிமையான வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

வெற்றிச் சின்னத்தைக் காட்டிச் சென்ற பிரதமர்:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி இரண்டு விரல்களை உயர்த்தி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி என்பதை உணர்த்துவதுபோல் சமிக்ஞை காட்டிச் சென்றார்.அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேர்தல் முன்னிலை நிலவரம் திருப்தியளிக்கிறது. குஜராத்திலும், இமாச்சல பிரதேசத்திலும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது" என்றார். 

எடுபடாமல் போன பணமதிப்பு நீக்க, ஜிஎஸ்டி எதிர்ப்புப் பிரச்சாரங்கள்:

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமல் போன்ற விவகாரங்களை முன்வைத்தே எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. ஆனால், எந்தப் பிரச்சாரம் தங்களுக்கு கை கொடுக்கும் என காங்கிரஸ் நினைத்ததோ அது கைவிட்டது. அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும் என்ற  பாடத்தை மீண்டும் கற்பித்துள்ளது. உ.பி. பிரச்சார உத்தியையே குஜராத், இமாச்சலுக்கும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ராகுலுக்கு சவால்..

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் வெளியாகிவுள்ள தேர்தல் முடிவு இது. ஒரு மாநிலத்தில் ஆட்சி கையைவிட்டுச் சென்றுள்ளது, மற்றொரு மாநிலத்தில் 22 ஆண்டு கனவு நனவாகாமல் போனது. இத்தகைய சூழலில் ராகுலுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் ராகுலுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x