Published : 22 Sep 2023 08:48 PM
Last Updated : 22 Sep 2023 08:48 PM

நாடாளுமன்றத்தில் வெறுப்புப் பேச்சு: பாஜக எம்.பி ரமேஷ் பிதுரிக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ்

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி

புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசின் எம்.பி.யான ரமேஷ் பிதுரி, நாடாளுமன்றத்தில் சக உறுப்பினரான பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்தை பேசி இருந்தார். ‘இது, இஸ்லாமிய வெறுப்பு பேச்சு’ என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில் அவரிடம் விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘அவை நடவடிக்கைக்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று ரமேஷ் பிதுரியிடம் பாஜக கேட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சந்திரயான்-3 குறித்து விவாதித்தபோது டேனிஷ் அலியை ரமேஷ் பிதுரி சாடியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தனது உறுப்பினர் பதவியை துறப்பேன் என டேனிஷ் அலி எச்சரித்துள்ளார். டெல்லி தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரமேஷ் பிதுரி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியான எனக்கே இந்த நிலை என்றால், அப்போது சாமானிய மக்களின் நிலை எப்படி இருக்கும்? எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். அவைத் தலைவர் இது குறித்து விசாரணை மேற்கொள்வார் என்று நம்புகிறேன். இல்லையென்றால், நான் எனது பதவியை துறப்பது குறித்து ஆலோசிப்பேன். என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என டேனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

வெறுப்புணர்வை அவையில் வெளிப்படுத்திய ரமேஷ் பிதுரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். அவர் பேசிய வார்த்தைகள் அவைக்கு உள்ளே மற்றும் வெளியே என எங்கும் பயன்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது பேச்சைக் கேட்டு மகிழ்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன் மற்றும் ரவி சங்கர் பிரசாத் ஆகியோருக்கும் தனது கண்டனத்தை ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா கண்டனம்: பாஜக எம்.பி ரமேஷ் பிதுரியின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், “சந்திரயான் விண்கலத்தின் வெற்றி குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர் டேனிஷ் அலியை நோக்கி மிக அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறிப்பிட்ட முஸ்லிம் எம்.பி மீது மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது உமிழப்பட்டுள்ள வெறுப்புரையாகும்.

ரமேஷ் பிதுரியின் வெறுப்புப் பேச்சு பாஜகவினரின் நாடி நரம்புகளில் இணைந்திருக்கும். முஸ்லிம் வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை இந்த பேச்சு எடுத்து காட்டியுள்ளது. பிதுரியின் உரை ஆச்சரியத்தைத் தரவில்லை. சாவர்க்கரைப் பின்பற்றுபவர்களின் மனநிலை இப்படியே இருக்கும் என்பதற்கு இந்த உரை மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய எம்.பி மீது இதுவரை பாஜக தலைமையோ, மக்களவை சபாநாயகரோ நடவடிக்கை எடுக்காததும் ஆச்சரியத்தைத் தரவில்லை. நாடாளுமன்றத்தில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் மீது பாய்ந்த நடவடிக்கை ரமேஷ் பிதுரி மீது ஏன் பாயவில்லை? புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் பாஜகவினர் இனி எவ்வாறு தரம் தாழ்ந்து நடப்பார்கள் என்பதற்கு இது தொடக்கப்புள்ளியோ என்று எண்ண வேண்டியுள்ளது. ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x