Published : 22 Sep 2023 12:39 PM
Last Updated : 22 Sep 2023 12:39 PM

பசுமை பட்டாசுகள்  உற்பத்தி, விற்பனைக்கு தடை: டெல்லி அரசின் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: பேரியம் பயன்படுத்தி பட்டாசு உற்பத்திக்கு அனுமதி கோரிய பட்டாசு உற்பத்தியாளர்களின் மனுவினை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தற்போதைய சூழ்நிலையில் பசுமை பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அனுமதி இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டுத் தடையை அனைத்து அதிகாரிகளும் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த வாரத்தில் நடந்த விசாரணையின்போது நீண்ட நேரம் வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி இந்த மனுவினை விரைவில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதில் அளித்த நீதிபதிகள் தற்போது எங்களால் தீபாவளி வாழ்த்துகள் மட்டுமே சொல்லமுடியும் என்று தெரிவித்தனர்.

மேலும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (என்இஇஆர்ஐ) மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள்கள் பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) ஆகிய இரண்டு அமைப்புகளால் வரையறுக்கப்பட்ட பசுமைப் பட்டாசு அளவினை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு மட்டுமே இந்த உத்தரவு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது டெல்லியில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து பாஜக எம்பி மனோஜ் திவாரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். மனோஜ் திவாரி சார்பாக அவரது வழக்கறிஞர், பசுமை பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு மாறாக, டெல்லி அரசு ஒட்டுமொத்த தடையை விதித்திருப்பதாக புகார் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், அவர்கள் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் செயல்படத் தயாரா என்று கேள்வி எழுப்பினர் மேலும், ஒருவர் நாட்டின் முதன்மை அமைப்புகளை நம்பவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

விசாரணையின் போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, "அரசு முன்மொழிந்துள்ள பேரியம் தடை சரியானது தான் ஆனால் அது 2018ம் ஆண்டு தீபாவளிக்குதான். கடந்த 2016ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸார் யாருக்கும் நிரந்தர பட்டாசு விற்பனைக்கான லைசன்ஸ் வழங்கவில்லை. பட்டாசு விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ள நிரந்தர லைசன்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து பட்டாசு விற்பனை கடைகளையும் போலீஸார் ஆய்வு செய்வார்கள்" என்றும் தெரிவித்தார்.

இந்த விசாரணையின் போது பதில் அளித்த நீதிபதிகள், "டெல்லி அரசு எடுத்துள்ள முடிவில் நாங்கள் தலையிட மாட்டோம். பட்டாசுக்கு தடை என்றால், அது முழுமையான தடைதான். மக்களின் உடல்நிலை மிகவும் முக்கியம். பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், எங்கே தடை இல்லையோ அங்கே சென்று வெடிக்கலாம்" என்று தெரிவித்தனர். கடந்த 2021ம் ஆண்டு, அனைத்து பட்டாசுகள் வெடிக்கத் தடையில்லை என்றும், பேரியம் கலந்த பட்டாசுகள் வெடிக்க மட்டுமே தடை என்றும் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x