Published : 22 Jul 2014 10:00 AM
Last Updated : 22 Jul 2014 10:00 AM

மகளிர் சுய உதவி குழு கடன் ரூ. 7,600 கோடி ரத்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

மகளிர் சுய உதவிக் குழுவினர் செலுத்த வேண்டிய ரூ. 7,600 கோடி கடனை ரத்து செய்வதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஹைதராபாதில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதற்கு முன்பாக, விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு, நெசவா ளர்களின் வங்கி கடன் ரத்து குறித்த அறிக்கையை கோட்டையா கமிட்டி முதல்வருக்கு வழங்கியது. இந்த அறிக்கை யின் பேரில் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:

“தேர்தல் வாக்குறுதியின் படி, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தவுடன் விவசாய வங்கி கடன் ரத்து கோப்பில் முதல் கையெழுத்து போடப்பட்டு, இதற்காக கோட்டையா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி கொடுத்த அறிக்கையின் பேரில் அமைச்சரவையில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் தற்போது பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கி உள்ள நிலையிலும், குடும்பத்தில் ஒரு விவசாயிக்கு ரூ 1.5 லட்சம் வங்கி கடன் தள்ளுபடி செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும், ரூ. 7, 600 கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கிக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.

இது போன்று நெசவாளர்களின் வங்கிக் கடனும் தள்ளுபடி செய்யப்படும். விலைவாசியை கட்டுப்படுத்த தனி கமிட்டி அமைக்கப்படும். வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்கவும், விவசாயத் திற்கு தினமும் 9 மணி நேர இலவச மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய காங்கிரஸ் அரசு, விவசாய வங்கிக் கடன் தொகையில் வெறும் 8 ஆயிரம் கோடி மட்டுமே ரத்து செய்தது.

தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். எனது தலைமையிலான அரசு சார்பில், கோயில்களுக்கு புதிய அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது பதவியில் நியமிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து பதவி விலக வேண்டும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x